ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

3 பேர் பலி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியில் குல தெய்வ கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இதில் வந்த இடத்தில் கோவிலின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி அவரது மகள்கள் அட்சயா (வயது 15), தனலட்சுமி (12), விஜயகாந்தின் சித்தப்பா மகனான ஆனந்த்குமார் (29) ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த 3 பேரின் உடல்களுக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

நிவாரணம் வழங்க நடவடிக்கை

முன்னதாக 3 பேரின் உடல்களுக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனது சொந்த நிதியில் இருந்த நிவாரணம் வழங்கினார்.

அதன்பின் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நீர்நிலைகளில் நீச்சல் தெரியாதவர்கள் குளிக்கும் போது பெற்றோர்களும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.

இந்த உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

எச்சரிக்கை பலகை

மாவட்டத்தில் எந்தெந்த குளங்கள், நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளதோ அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் கணக்கெடுத்து ஆய்வு மேற்கொண்டு அந்த இடங்களில் ஆபத்தான குளங்கள் என எச்சரிக்கை பலகை வைக்கப்படும். கிராமப்புறங்களில் 80 சதவீதம் பேர் நீச்சல் தெரிந்தவர்களாக உள்ளனர். நகர்ப்புறங்களில் தான் நீச்சல் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். இறந்த 3 பேரும் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள். அவர்கள் முதன்முறையாக இப்போது குளங்களை பார்த்துள்ளனர். அதனால் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments