ஆலங்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
ஆலங்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி கிராமம் உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த கிராம பகுதிக்கு புதுக்கோட்டை வழியாக வெண்ணாவல்குடிக்கு 11-வது நம்பர் அரசு நகர பஸ்சும், புதுக்கோட்டை வழியாக வெண்ணாவல்குடி, ஆலங்குடி செல்லும் 3-பி அரசு நகர பஸ்சும், அதேபோல் ஏ-4, 18, 18-ஏ என 5 பஸ்களும் வெண்ணாவல்குடி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்தது.

சிரமம்

இந்நிலையில் இந்த 5 பஸ்சுகளும் தற்போது வெண்ணாவல்குடி கிராமத்திற்கு இயக்கப்படாத நிலையில், 11-வது நம்பர் அரசு பஸ் மட்டும் வாரத்துக்கு இருமுறை இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் வெண்ணாவல்குடி கிராமத்தை சுற்றி உள்ள கிராமத்திலிருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள், அத்தியாவசிய தேவைக்காக புதுக்கோட்டை, ஆலங்குடிக்கு செல்பவர்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மறியல்

எனவே உடனடியாக நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த 11-வது நம்பர் அரசு நகர பஸ்சை கிராமமக்கள் சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் ேபசி நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments