புரி - ஹவுரா (கொல்கத்தா) இடையே காணொலி மூலம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! ரூ.8,200 கோடி ரயில்வே திட்டங்களும் தொடக்கம்




ஒடிசாவின் முதலாவது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புரி-ஹவுரா இடையே ரெயில்

அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஒடிசாவின் புரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒடிசாவின் முதலாவது வந்தே பாரத் ரெயிலான இந்த சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக புரியில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

பொருளாதாரத்துக்கு ஊக்கம்

ஒடிசாவில் இன்று தொடங்கப்பட்டு உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புரி மற்றும் ஹவுரா இடையேயான மதம், ஆன்மிகம், கலாசார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்.

இந்த ரெயிலுடன் மொத்தம் 15 வந்தே பாரத் ரெயில்கள் நாடு முழுவதும் தற்போது இயக்கப்படுகின்றன. இது நாட்டின் இணைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கின்றன.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வந்தே பாரத் ரெயில் ஓடும் போதெல்லாம் இந்தியாவின் வேகமும் முன்னேற்றமும் தெரியும். இது பயணிகளுக்கான பயண அனுபவத்துடன் வளர்ச்சியின் அர்த்தத்தையும் முற்றிலும் மாற்றிவிடும்.

அனைத்து மாநிலங்களின் பங்கேற்பு

புதிய தொழில்நுட்பங்களும், வசதிகளும் டெல்லி அல்லது பெருநகரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு காலம் இருந்தது. ஆனால் தற்போது, இந்தியா ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

இந்த புதிய இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பங்கள் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் சென்று சேர்கிறது.

நாடு தனது சுதந்திரத்தின் ‘அமிர்த காலத்தை' கொண்டாடும் வேளையில், அதன் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த அளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்த அளவுக்கு அதன் கூட்டுத்திறன் அதிகரிக்கும்.

மிகவும் சவாலான நேரங்களில் கூட இந்தியா தனது வளர்ச்சிப்பயணத்தை அப்படியே தொடர்ந்தது. இதற்குக் காரணம், அனைத்து மாநிலங்களின் பங்கேற்பும், கூட்டாக முன்னேறும் இந்தியாவின் மனப்பான்மையும்தான்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இரட்டை ரெயில் பாதை

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அந்தவகையில் புரி மற்றும் கட்டாக் ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.

மேலும் ஒடிசாவின் 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரெயில்வே நெட்வொர்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதைத்தவிர சம்பல்பூர்-தித்லகார் இடையே இரட்டை ரெயில் பாதை, அங்குல்-சுகிந்தா இடையேயான அகல ரெயில் பாதை, மனோகர்பூர்-ரூர்கேலா-ஜார்சுகுடா-ஜம்கா இடையேயான 3-வது ரெயில்பாதை ஆகிய தடங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷி லால், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் புரி ரெயில் நிலையத்தில் கலந்து கொண்டனர்.

வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியதையொட்டி மேற்கு வங்காளத்தின் ஹவுரா ரெயில் நிலையத்தில் கலாசார நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேற்கு வங்காளத்துக்கு இது 2-வது வந்தே பாரத் ரெயில் ஆகும்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments