பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பேருந்து வசதி: சிபிஎம் கோரிக்கை
பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   

பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட பயணிகள், பக்தர்கள் திருச்செந்தூருக்கு பயணிக்கின்றனர். பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பேருந்து வசதி இல்லை.   சிதம்பரம், நாகை, திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

அவ்வாறு வரும் பேருந்துகள் பெரும்பாலும் முழுவதுமாக பயணிகளை ஏற்றி வருவதால், குடும்பமாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள், பயணிகள் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.   மேலும், பல நேரங்களில் பேருந்தில் அதிக பயணிகள் இருந்தால், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வராமல், தம்பிக்கோட்டை புறவழிச்சாலை வழியாகவே, கிழக்கு கடற்கரைச் சாலையில் திருச்செந்தூர் நோக்கி பேருந்துகள் சென்று விடுகின்றன.   

இதனால், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து ஏமாற்றமடைந்து பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பும் நிலை உள்ளது. இதேபோல், பகல் நேரங்களிலும் பேருந்துகள் அதிக பயணிகள் இருந்தால் பட்டுக்கோட்டை வருவதில்லை.  

எனவே, "பட்டுக்கோட்டை பகுதி பயணிகள், பக்தர்கள் பயன்பெறும் வகையில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும்" என்ற கோரிக்கை எழுந்துள்ளது.   

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி கூறுகையில், 

பட்டுக்கோட்டை பகுதி பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து துறை அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதே போல் இன்னும் தேவையான பிற பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.   பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும், பெரும்பாலான நகரப் பேருந்துகள் தற்போது இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பொது மக்களால் கூறப்பட்டு வருகிறது.

பகலில் பெரும்பாலான வழித்தடங்களில் குறைவான சேவை மட்டுமே உள்ளது.  இரவு எட்டு மணிக்கு பிறகு பெரும்பாலான நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், பட்டுக்கோட்டை நகரத்துக்கு வரும் பயணிகள், நோயாளிகள், கடைகளுக்கு வேலைக்கு வரும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களுக்கான போக்குவரத்து வசதி முற்றிலும் முடங்கியுள்ளது.   

எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருச்செந்தூருக்கு நேரடி பேருந்து வசதியும், நிறுத்தப்பட்டுள்ள நகரப் பேருந்துகளை உடனடியாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments