ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம்: புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5-ந் தேதி பாராட்டு விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் 6 அமைச்சர்கள் பங்கேற்பு
ஜல்லிக்கட்டுக்கான தடைநீக்கம் தீர்ப்பையொட்டி புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5-ந் தேதி பாராட்டு விழா தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் 6 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பாராட்டு விழா

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டப்போராட்டத்தால் அரசு தரப்பில் வக்கீல்கள் மூலம் வாதத்தை முன்வைத்து நிரந்தர தீர்வு காணப்பட்டதாக தி.மு.க. தரப்பிலும், ஜல்லிக்கட்டு பேரவையினர், ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி பாராட்டு விழா நடத்த ஜல்லிக்கட்டு பேரவையினர், ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவானது புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அருகே தஞ்சை-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் இடையப்பட்டி அருகே நடைபெற உள்ளது. இந்த இடத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரியகருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

1 லட்சம் பேர்

அதன்பின் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றதினால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த புதுக்கோட்டையில் நடத்த திட்டமிட்டோம். இந்த பாராட்டு விழா மாலை 5 மணிக்கு நடைபெறும். விழாவில் 1 லட்சம் பேர் வருகை தருகிறார்கள். ஜல்லிக்கட்டு என்றால் மதுரை, புதுக்கோட்டை தான். மதுரையில் ஏற்கனவே 2 கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிவிட்டு வந்துவிட்டார். அதனால் புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கான வெற்றி விழாவை மதுரை அலங்காநல்லூரில் நடத்த அறிவித்துவிட்டார்கள். பாராட்டு விழாவை புதுக்கோட்டையில் வைக்க ஜல்லிக்கட்டு பேரவையினர் கேட்டுக்கொண்டதால் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

வரலாற்று சாதனை

ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தடை பெறுவதாகவும், நீக்குவதாகவும் பல இன்னல்களை தொடர்ந்து இருந்து வந்தது. இறுதி வடிவமாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் திறமையான மிகப்பெரிய வழக்கறிஞர்கள் மூலம் சரியான வாதங்களை முன்வைத்து ஜல்லிக்கட்டை மீட்டு கொடுத்ததற்கும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்ததற்காகவும் தமிழக முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த ஜல்லிக்கட்டு பேரவையினர் தயாராக உள்ளோம் என்றார். அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் இந்த பாராட்டு விழா அனுமதியை தந்துள்ளனர். புதுக்கோட்டையில் இதுவரை பிரமாண்டமாக கூட்டம் கூடியதில்லை என்ற அளவுக்கு வரலாற்று சாதனையை உருவாக்குவோம் என்றார்.

ஆலோசனை கூட்டம்

அதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரியகருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் ஜல்லிக்கட்டு பேரவையினர், ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், அப்துல்லா எம்.பி., முத்துராஜா எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் செந்தில் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments