புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் புதுக்குடி, வடக்கு அம்மாபட்டினம் பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில், மீனவ சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தனர். பின்னர் கோட்டைப்பட்டினம், புதுக்குடி, வடக்கு அம்மாபட்டினம் ஆகிய பகுதிகளில் மீன்வளத்துறை சார்பாக கட்டப்பட்டு வரும் வலை பின்னும் கூடங்களை பார்வையிட்டார்.

மேலும் அமைச்சர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் நாகை கவுதமன், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பால் உற்பத்தி குறைவு

புதுக்கோட்டையில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் கால்நடை பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டதில் பால் உற்பத்தி குறைவாக இருப்பது தெரிந்தது. இதேபோல பசுந்தீவனம் உற்பத்தியிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் தான். இதனை நிவர்த்தி செய்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். புதிய பசு மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வெண் பன்றிகளை வாங்கி வெண் பன்றிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த மாடுகளை கழிப்பதற்கும், புதிய மாடுகளை வாங்கவும், தண்ணீர் அதிகமாக கொண்டு வரவும், உரிய அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிவாரண தொகை

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி குறையவில்லை. பால் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தனியார் பால் பண்ணையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். இருப்பினும் ஆவினில் பால் தட்டுப்பாடின்றி கொடுக்கப்படுகிறது. கால்நடைகளில் பசுந்தீவனம் உற்பத்தியை அதிகரித்து, பால் உற்பத்தியை அதிகரிக்கப்படும். கால்நடை பண்ணைகள் புத்துயிர் பெற பணிகள் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் கால்நடை மருத்துவ கல்லூரி வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. தேவைப்படுகிற நேரத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பார். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்களின் படகுகள்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம் கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும். ஜல்லிக்கட்டுகளில் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு முறை என்பது காளைகள் அதிகமாக வருவதால் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான முறையில் சட்டப்போராட்டம் நடத்தினார். அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் புதுக்கோட்டை மச்சுவாடியில் 694 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கால்நடை பண்ணையில் பசுமாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அப்துல்லா எம்.பி., முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments