பெண் அதிகாரிகள் நிறைந்த புதுக்கோட்டை!



புதுக்கோட்டை புதிய கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்றார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்தவர் கவிதாராமு. இவர் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக வணிகவரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரிடம் முன்னாள் கலெக்டர் கவிதாராமு கோப்புகளை ஒப்படைத்து வாழ்த்துகள் தெரிவித்தார். அதன்பின் கலெக்டர் மெர்சி ரம்யா நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தேவையான பயனாளிகளை சென்றடையவும், குறைதீர்க்கும் முகாம்கள் மேலும் செம்மையாக நடைபெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தும் விரைவாகவும், துரிதமாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றிடஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட மெர்சி ரம்யா கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தார். 2016-ம் ஆண்டு உதவி கலெக்டராக ஈரோடு மாவட்டத்திலும், 2017-2019-ம் ஆண்டில் திண்டிவனம் சப்-கலெக்டராகவும், 2019-2021-ம் ஆண்டில் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) கன்னியாகுமரி மாவட்டத்திலும், 2021-2023-ம் ஆண்டில் வணிக வரித்துறையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது கலெக்டராக முதன் முறையாக புதுக்கோட்டையில் பொறுப்பேற்று இருக்கிறார். அவருக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பின் தற்போது 2023-ம் ஆண்டில் இதுவரை 43 கலெக்டர்கள் பணியாற்றியிருக்கின்றனர். தற்போது மெர்சி ரம்யா 44-வது கலெக்டராக பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு முன்பு பெண் கலெக்டர்கள் பணியாற்றிய இம்மாவட்டத்தில் இவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் பெண்களே அதிகம் உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலராக செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மஞ்சுளா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா உள்பட பல்வேறு துறைகளில் பெண் அதிகாரிகளே தலைமை பொறுப்பில் உள்ளனர். தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டரும் பெண் ஆவார். இதனால் பெண்கள் அதிகாரிகள் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டது. புதுக்கோட்டை பெண் அதிகாரிகளின் கோட்டையானது.

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா சென்னையை சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினமே புதுக்கோட்டை வந்து ரோஜா இல்லத்தில் தங்கினார். கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கிய போது மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். அதன்பின் கலெக்டரின் அறைக்கு அவரை அழைத்து செல்ல அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது கலெக்டரின் அறை 2-வது தளத்தில் இருப்பதாகவும், லிப்டில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்து, லிப்ட்டை நோக்கி அழைத்து சென்றனர். அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா லிப்ட் வேண்டாம், படிக்கட்டுகள் வழியாகவே சென்றுவிடுவோம் எனக்கூறி நடந்து சென்றார். இதனை மற்ற அதிகாரிகள் யாரும் சற்று எதிர்பார்க்கவில்லை. அவருடன் மற்ற அதிகாரிகளும் உடன் சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments