சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரெயில் பாதை கனவுத் திட்டம் நிறைவேறுமா ?சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது தென்தமிழக மக்கள் மட்டும் அல்ல; தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது.

தென் மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் (1).விருதுநகர்-மானாமதுரை, (2).திருநெல்வேலி -திருவனந்தபுரம் ரெயில் பாதைகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரெயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை ஆகும்.

திருநெல்வேலி-நாகர்கோவில் 74 கி.மீ. நீளமுள்ள அகல ரெயில்பாதை 8-4-1981 அன்றும், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் 87 கி.மீ. அகல ரெயில் பாதை 15-4-1979 அன்றும், விருதுநகர்-அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 1-9-1963 அன்றும், அருப்புக்கோட்டை- மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 2-5-1964 அன்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டன.

இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென்மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்புபாதைகள். அதன் பிறகு எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை. தற்போது சென்னை-கன்னியாகுமரி இருப்புப்பாதை வழித்தடம் தமிழகத்தின் முதன்மையான பாதையாக உள்ளது. இந்த பாதையில் இருந்து கிளைப் பாதைகளாக நாகர்கோவில்-கன்னியாகுமரி ரெயில் பாதை, திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில் பாதை, மணியாச்சி- தூத்துக்குடி ரெயில்பாதை, மதுரை-ராமேசுவரம் ரெயில்பாதை என பிரிந்து செல்கின்றன. இவ்வாறு பிரிந்து செல்லும் பாதை கடற்கரை அருகில் உள்ள நகரங்களுடன் முட்டி நின்று விடுகின்றன. இவ்வாறு முட்டி நிற்பதால் இந்த ரெயில்பாதை வழித்தடங்களை நீட்டிக்கவோ, கூடுதல் ரெயில்களை இயக்கவோ முடியாத நிலை இருக்கிறது.

கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக 136 கி.மீட்டர் பயணித்து சுற்றுப் பாதையில்தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரெயில்பாதை அமைக்கப்பட்டால் 70 கி.மீ. மட்டுமே இதற்கான பயண தூரமாக இருக்கும். அதுபோல் கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குறைந்த நேரத்தில் பயணிக்கலாம்.

கிழக்கு கடற்கரை ரெயில் பாதை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சீர்காழி, கடலூர், புதுச்சேரி, மகாபலிபுரம் வழியாக சென்னை வந்தடைகிறது. இவ்வாறு அமையும் போது அந்த வழித்தடத்தில் உள்ள தூத்துக்குடி, கடலூர், சென்னை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்கள் அனைத்தும் நேரடியாக ரெயில் வழிப்பாதை மூலம் இணைக்கப்பட்டுவிடும். இதனால் அந்தப் பகுதிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்.

கிழக்கு கடற்கரை ரெயில்பாதை அமைக்க உதவியாக தற்போது ஒரு சில இடங்களில் ரெயில் பாதைகள் இருக்கின்றன. அதில் குறிப்பாக காரைக்குடி- பட்டுகோட்டை-திருத்துறைப்பூண்டி 121 கி.மீ. ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்டு விட்டது.

பேரளம் -கடலூர் 91 கி.மீ. அகலப் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி-சென்னை கிழக்கு கடற்கரை ரெயில் பாதையில் நடுப்பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் ரெயில் வழித்தடங்கள் தற்போது இருக்கின்றன. ஆனால் சென்னையில் இருந்து கடலூர் வரையும், கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரையிலும் ரெயில் வழி தடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காரைக்கால் - பேரளம் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரெயில் இருப்புபாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய 2008-2009 ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அப்போதைய திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை மந்திரியுமாக இருந்த ராதிகா செல்வியின் சீரிய முயற்சியால் அந்தத் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கான தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி 2013-2014-ம் ஆண்டு முடிவடைந்து, திட்ட மதிப்பீட்டை ரெயில்வே வாரியத்துக்கு தென்னக ரெயில்வே சமர்ப்பித்தது.

இந்த ஆய்வுப்பணிகள் இரண்டு பிரிவுகளாக நடந்தன.முதல் பிரிவில், காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை புதிய ரெயில்பாதை அமைக்க ஆய்வுகள் நடந்தன. அதன்படி 214.81 கி.மீட்டர் தூரம் ரெயில்பாதை அமைக்க ரூ.879 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, சூரங்குடி, குளத்தூர் வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேரும் வகையில் ஆய்வு செய்யப்பட்டது.

2-வது பிரிவு திட்டத்தின்படி, கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 247.66 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதை அமைக்க ரூ.1080 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இந்த வழித்தடம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணிநகர், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரெயில் நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து 462.47 கி.மீட்டர் தூரம் ரெயில்பாதை அமைக்க ரூ.1,965 கோடி திட்ட மதிப்பீடாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக ரெயில்வே வாரியம் ஒரு புதிய ரெயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் மூலம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானத்தை திருப்பி எடுக்க முடியும் என்பதை கணக்குப் பார்ப்பது உண்டு. இதனை 'ரேட் ஆப் ரிட்டன்' என்று கூறுவார்கள்.

புதிதாக அமையும் ரெயில் பாதையால் பயன் அடையும் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மின்திட்டம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருவாயை கணக்கில் கொண்டு இந்த 'ரேட் ஆப் ரிட்டன்' கணக்கீடு செய்யப்படும். கிழக்கு கடற்கரை ரெயில்பாதை திட்டத்தில் காரைக்குடி - தூத்துக்குடி ரெயில் பாதை திட்டமும், தூத்துக்குடி - கன்னியாகுமரி ரெயில் பாதை திட்டமும் 'மைனஸ்' அளவில் 'ரேட் ஆப் ரிட்டன்' இருப்பதாக ரெயில்வே துறையால் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதாவது அந்தப் பகுதியில் போதிய வருவாய் இல்லை. எனவே திட்டம் லாபகரமாக இருக்காது என்பதே ரெயில்வே துறையின் கருத்து. இதனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரெயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த வழித்தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மிகத் தலங்கள் இருக்கின்றன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்தை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும். கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயன்பெறும். வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்துக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும். சமீபத்தில் மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் தென்மாவட்ட எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

கிழக்கு கடற்கரை ரெயில்பாதை திட்டம் 'ரேட் ஆப் ரிட்டன்' குறைவாக இருக்கிற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.தென்மாவட்ட வளர்ச்சிக்காக இந்த கிழக்கு கடற்கரை ரெயில் பாதையை, சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

பல்வேறு மாநிலங்கள் 50 சதவீத நிதியைக் கொடுத்து ரெயில்வேத் துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அளவு ரெயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே கிழக்கு கடற்கரை இருப்புபாதை திட்டத்தை தமிழக அரசும், ரெயில்வேத் துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தென்மாவட்ட பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.

சபரிமலை ரெயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற ரெயில்வே துறைக்கு கேரள அரசு 50 சதவீதம் நிதி கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 50 சதவீதம் தந்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க செயலாளர் எட்வர்டு ஜெனி கூறியதாவது:-
அரசின் அடிப்படை கடமை என்பது மக்களுக்கு தேவையான பொது போக்குவரத்தை அமைத்து அதை பராமரிப்பது. கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தில், அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்கக்கூடாது. அரசு பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். மற்றொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அருகில் தமிழ்நாட்டு பகுதிகளில் நாம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இந்த எல்லை பகுதிகளில்தான் கூடங்குளம், ராக்கெட் ஏவுதளம், நாங்குநேரி கடற்தளம் என ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. எனவே நமது எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இந்த கிழக்கு கடற்கரை ரெயில் திட்டம் தேவைப்படுகிறது. ஆகவே மத்திய அரசு இந்த திட்டத்தை ராணுவ பாதுகாப்பு கருதி முழுமையாக ரெயில்வே நிதியில் செயல்படுத்தலாம். தற்போது மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள இருவழிப்பாதை திட்டத்தை ரெயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். செய்து வருகிறது. இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதியில் முடிவு பெற்றுவிடும் நிலையில் உள்ளது. இந்த திட்டம் முடிந்த பிறகு கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை ஆர்.வி.என்.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது சுமார் 4,131 கி.மீட்டர் தூரத்திற்கு ரெயில்பாதை வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும் போது தமிழகத்தின் ரெயில்பாதை வழித்தடங்கள் மிகவும் குறைவு. தமிழகம் அகில இந்திய அளவிலான வளர்ச்சியில் 2-வது பெரிய மாநிலம் ஆகும். இதில் ரெயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ. பரப்பளவில் எவ்வளவு ரெயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாட்டில் தற்போது 32.07 என்ற அளவில் ரெயில் அடர்த்தி உள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தைவிட ரெயில் அடர்த்தியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வரி வருவாயில் 2-ம் இடத்தில் உள்ளதை போன்று ரெயில் அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய ரெயில் பாதை திட்டத்தையாவது செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தின் ரெயில் தேவைக்கு தீர்வுகாண முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments