புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 6,157 விண்ணப்பங்கள் குவிந்தன தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு தொடங்கியது
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 6,157 விண்ணப்பங்கள் குவிந்தன. தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு கல்லூரிகள்

தமிழகத்தில் கடந்த மே மாதம் 8-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது. இந்த விண்ணப்பம் கடந்த 22-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் பி.காம்., பி.எஸ்.சி. படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்திருந்தனர்.

தனியார் கல்லூரிகளிலும் இடத்தை பிடிப்பதற்காக கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

6,157 மாணவிகள் விண்ணப்பம்

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கறம்பக்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகளும், மேலசேவல்புரியில் அரசு உதவி பெறும் கல்லூரியும் உள்ளது. இதில் மாணவிகளுக்கான ஒரே ஒரு கல்லூரி புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ஆகும். மற்றவை இரு பாலர் கல்லூரியாகும்.

அரசு மகளிர் கல்லூரியில் சேர்வதற்கு மாணவிகளிடையே கடும் போட்டி இருக்கும். இந்த கல்லூரியில் இளங்கலையில் 13 பாடப்பிரிவில் மொத்தம் 1,240 இடங்கள் உள்ளன. இதில் சேர்வதற்கு இந்த ஆண்டு 6 ஆயிரத்து 157 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது இருக்கிற இடத்தை விட 5 மடங்கு அதிகம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

தரவரிசை அடிப்படையில்...

பி.காம். பாடப்பிரிவில் காலை மற்றும் மாலை நேர வகுப்பில் தலா 60 இடங்கள் உள்ளன. இதற்கு 1,068 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகள் விண்ணப்பித்ததில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து தரவரிசை அடிப்படையில் மாணவிகளுக்கு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. கடந்த 29-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

தொடர்ந்து பொது கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. இதில் பி.எஸ்.சி. இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு வருகிற 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்ததாக கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments