இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல் 33 கிலோ தங்கம் பிடிபட்டது
இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல் 33 கிலோ தங்கம் பிடிபட்டது கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்டனர் ராமேசுவரம் அருகே இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வந்த 33 கிலோ தங்கம் சிக்கியது. கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை நீச்சல் வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

தமிழக கடல் பகுதிகளிலேயே ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

தொடரும் கடத்தல்

ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு அருகே இலங்கை கடற்பகுதி இருப்பதுதான் இதற்கு காரணம்.

இதை சாதகமாக பயன்படுத்தி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை, போதைபொருட்கள், மஞ்சள் உள்ளிட்டவை படகுகளில் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

அதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்து, சர்வதேச கடல் எல்லையில் வைத்து தமிழக படகுகளுக்கு மாற்றி, அங்கிருந்து கடத்தல்காரர்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டுவருவதும் நடந்து வருகிறது.

எனவே கடத்தல்களை தடுக்க கடற்படையினர், கடலோர காவல் படையினர், அதிகாரிகள், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தங்கக்கட்டிகளுடன் வந்த படகு

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சந்தேகிக்கப்பட்ட ஒருவரது போன் மூலம் யார்-யாருக்கு பேசி உள்ளார்கள்? என்ற விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் அந்த போன் சிக்னல் நடுக்கடலில் எங்கு செயல்படுகிறது? என்பதை வைத்து, கடத்தல்காரர்களின் செயல்பாட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே இலங்கை பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகு இந்திய எல்லைக்குள் புகுந்தது. அதில், கடத்தல்காரர்கள் இருப்பதை உறுதி செய்துகொண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உடனே மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களது உதவியை நாடினர்.

கடலில் தூக்கிப்போட்டனர்

உடனே மண்டபத்தில் இருந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 அதிவேக ரோந்து படகுகளில் மன்னார் வளைகுடா நோக்கி விரைந்து சென்றனர். இதற்கிடையே அந்த பிளாஸ்டிக் படகு, மண்டபத்துக்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட மனோலி தீவு கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

கடலோர காவல் படையின் ரோந்து படகுகளை கண்டதும், அந்த படகில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த பார்சல்களை வேகவேகமாக கடலில் தூக்கிப்போட்டனர்.

சற்று நேரத்தில் அந்த படகை மடக்கியதுடன், அதில் ஏறி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும், இந்திய கடலோர காவல் படையினரும் தீவிர சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. அந்த படகில் 3 பேர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் கடலில் தூக்கிப்போட்ட பார்சல்கள் பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து 3 பேரையும், மண்டபம் கடலோர காவல் படை நிலையத்துக்கு அழைத்து வந்து அதிரடி விசாரணை நடந்தது.

வீட்டில் பதுக்கிய தங்கம் மீட்பு

அப்போது, அந்த 3 பேரும் வேதாளையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் படகில் கடத்தி வந்து கடலில் தூக்கிப்போட்டது தங்கக்கட்டிகளுடன் கூடிய பார்சல்கள் எனவும் தெரியவந்தது. மேலும், வேதாளை பகுதியில் உள்ள வீட்டில் கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே நேற்று முன்தினம் இரட்டை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டார்கள். வேதாளையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்த தங்கக்கட்டிகளை எடுப்பது, அதே நேரத்தில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடுவது என்று நடவடிக்கைகளை அடுத்தடுத்து தொடர்ந்தனர்.

முதற்கட்டமாக வேதாளையில் உள்ள, சம்பந்தப்பட்ட வீட்டில் தேடியபோது அதிக அளவில் அங்கு தங்கக்கட்டிகள் சிக்கின. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களையும், தங்கக்கட்டிகளையும் மண்டபம் கடலோர காவல் படை நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கடலில் இருந்தும் மீட்பு

அதே நேரத்தில் கடலோர காவல் படையில் நீ்ச்சலில் நிபுணத்துவம் பெற்ற கமாண்டோ வீரர்கள் உதவியுடன், தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சல்கள் கடலில் வீசப்பட்ட இடத்தில் தேடும் பணி நடந்தது. நேற்று முன்தினம் இரவு வரை தீவிரமாக தேடப்பட்ட நிலையில் எதுவும் சிக்காததால் நேற்று காலையில் மீண்டும் தேடும் பணி நடந்தது.

பகல் 11 மணி அளவில், தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சல்களை வீரர்கள் மீட்டனர். பின்னர் அவற்றையும் கடலோர காவல் படை நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

5 பேரிடம் விசாரணை

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “வேதாளை பகுதியில் உள்ள வீட்டில் நடத்திய சோதனையில் இருந்து சுமார் 20 கிலோ தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. கடத்தல்காரர்கள் கடலில் வீசிய பார்சல்களை கைப்பற்றியதில், அதில் சுமார் 13 கிலோ அளவுக்கு தங்கக்கட்டிகள் இருந்தன. இதுெதாடர்பாக சாதிக்அலி (வயது 33), அப்துல் ஹமீது (33), அசாருதீன் (27), முகமது நாசர் (35), ரவிக்குமார் (47) ஆகிய 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது, என்று தெரிவித்தனர்.

ேநற்று முன்தினம் அந்த வீட்டில் எடுக்கப்பட்டது 3 கிலோ தங்கக்கட்டிகள் என்றுதான் தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த வீட்டில் கிட்டத்தட்ட 20 கிலோ அளவுக்கு தங்கம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரிகள் தகவலின் மூலம் தெரியவருகிறது.

33 கிலோ தங்கம்

அதே நேரத்தில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் ெமாத்தம் 32 கிலோ 870 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் பிடிபட்டு இருப்பதாகவும், இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என்றும் கூறி உள்ளனர்.

கடலில் வீசியதில் தேடிப்பிடித்த தங்கக்கட்டிகள், வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக்கட்டிகள் என ஒரே நேரத்தில் சுமார் 33 கிலோ கடத்தல் தங்கம் சிக்கி இருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments