முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்: புதுக்கோட்டையில் நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன




தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் முதல் கட்டமாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சியில் காந்திநகர் மற்றும் ராஜகோபாலபுரம் ஆகிய 2 இடங்களில் நலவாழ்வு மையங்களை தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டதையும் அவர் திறந்து வைத்தார். இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தலா ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் ஆகியோர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நலவாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.

 இதில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கான கர்ப்பகால பரிசோதனைகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகள், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சேவைகள், தொற்று நோய் தடுப்பு பணிகள் ஆகியவையும், நலக்கல்வி வழங்குதல், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள் ஆகியவையும் வழங்கப்பட்டு நகர்ப்புறத்தில் சுகாதாரம் தொடர்பான சேவைகள் மேம்படுத்தப்படும். இந்த திறப்பு விழா நிகழ்ச்சி புதுக்குளம் சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்றதில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டார்.

 இந்நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., முத்துராஜா எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலாஜி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments