ராமேசுவரம் - தலைமன்னார் இடையே மீண்டும் தொடங்குமா கப்பல் போக்குவரத்து?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடைக் கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 24.2.1914-ல் தொடங்கப்பட்டது.

விடுதலை அடைந்த பின்னரும் போக்கு வரத்து தொடர்ந்தது. 22.12.1964-ல் தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு, 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரம்-தலைமன்னார் இடையே ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்துக்கு மூன்று நாட்கள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ‘ராமானுஜம்' என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயணிகள் கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரை பயணம் செய்தனர்.

இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் வணிகர்கள் பல்வேறு வகையான பண்டங்களையும் சரக்குகளையும் ராமேசுவரத் திலிருந்து கொழும்பு கொண்டு சென்றனர். கொழும்பிலிருந்து எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தமிழகத்துக்கு வாங்கி வந்தனர். இதனால், தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை போராக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களால் 1981-ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், தென்மாவட்டங்கள் வணிகரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.தமிழக-இலங்கை கடல் தொலைவைக் காட்டும் வரைபடம்.
21.11.2021-ல் அரசுமுறைப் பயணமாக ராமேசுவரம் வந்த இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இரு நாடுகள் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கு வதற்காக ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 13-ல் தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் இந்தியா- இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கும் நோக்கில் ராமேசுவரம்-தலைமன்னார், ராமேசுவரம்-யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்குவதற்கு ராமேசுவரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமைப் பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை, மதிப்பீடுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தால் இரு நாடுகள் இடையே கப்பல் போக்குவரத்துத் தொடங்கும்.இது குறித்து நெய்தல் வணிகர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தில்லைப்பாக்கியம் கூறுகையில், கப்பல் போக்குவரத்து மூலம் இரு நாடுகளும் ஆன்மிகரீதியாகவும் இணைக்கப்படும். ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு ராமாயணம் தொடர்புடைய ஆன்மிக தலங்களுக்குச் செல்ல முடியும்.

இலங்கையிலிருந்து கப்பல் மூலம் ராமேசுவரம் வருவோர் ரயில் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பவுத்த தலங்களுக்கு எளிதில் செல்ல முடியும். இலங்கையிலிருந்து சுற்றுலா, கல்வி, மருத்துவ சிகிக்சைக்காக வரக்கூடியவர் களுக்கு இங்கு செலவு மிகவும் குறையும். இதன் மூலம் இரு நாடுகள் இடையே நல்லுறவு வளர்வதுடன், தமிழகம் மற்றும் இலங்கை தமிழர்களின் வணிக, பொருளா தாரமும் முன்னேற்றம் அடையும், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments