தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில்நுட்ப கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில்நுட்ப கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பருவமழை காலத்தில், காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் ஏற்படுத்திட தொழில்நுட்பக் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளிலுள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விவரங்களை மீன்வளத்துறையினரிடமிருந்து பெற்று அத்துறையினருடன் இணைந்து தகுந்த முன்னேற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

புயல் பாதுகாப்பு மையங்கள்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் தங்கள் வசம் உள்ள மிதவைப்படகுகள் மற்றும் உயிர்காக்கும் சாதனங்கள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களை நல்ல நிலையில் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனே சரிசெய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் சேதங்களை உடனுக்குடன் சரிசெய்ய தகுந்த எந்திரங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலையில் சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்யவும், போதுமான மாற்று மின்கம்பங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு...

வருவாய்த்துறையினர் பேரிடர் குறித்தான தகவல்களை கலெக்டர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும் 1077 என்ற அவசரகட்டுப்பாட்டு மைய தொலைபேசியிலோ, 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்க வேண்டும். தாசில்தார்கள் எல்லா மழைமானிகளையும் தணிக்கை செய்து நல்ல நிலையில் இயங்குகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

களப்பணி அலுவலர்களான வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் 24 மணி நேரமும் தலைமையிடத்தில் தங்கியிருந்து நிலைமையினை கண்காணித்து உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும். தென்மேற்கு பருவமழையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments