கீரமங்கலம் பகுதியில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை பொதுமக்கள் அவதி
கீரமங்கலம் பகுதியில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டை கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய குடும்ப அட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், குளமங்கலம், பனங்குளம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில வருடங்களில் திருமணம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டைகள் பெற நூற்றுக்கணக்கானோர் ஆலங்குடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். சுமார் 6 மாதங்கள் கடந்தும் கூட புதிய குடும்ப அட்டைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வட்ட வழங்கல் அலுவலகம் சென்று கேட்டாலும் சென்னையிலிருந்து இன்னும் வரவில்லை என்று கூறுகின்றனர்.

அவதி

இதுகுறித்து புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யும் போது பழைய குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்த பிறகே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். அதுபோல பழைய குடும்ப அட்டையில் நீக்கம் செய்து புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்து 6 மாதங்களாகியும் இதுவரை புதிய குடும்ப அட்டை கிடைக்கவில்லை. இதனால் ரேஷன் பொருட்களும் வாங்க முடியாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகம் சென்று கேட்டால் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த அலுவலகங்களிலேயே புதிய குடும்ப அட்டைகள் அச்சடித்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் ஒரே இடத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் பதில் கூறுகின்றனர்.

இதனால் அரசு சலுகைகள், எதுவும் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே அந்தந்த மாவட்ட தலைநகரில் புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் நடந்தால் இது போல பல மாதங்கள் காத்திருக்காமல் சில மாதங்களில் குடும்ப அட்டைகள் பெறலாம் என பொதுமக்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments