காரைக்கால் - பேரளம் ரயில் பாதை பணி தீவிரம்; இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்!



காரைக்கால், திருநள்ளாரில் பிரதித்தி பெற்ற சனி பகவான் கோவிலும், அருகில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது. இதனால், மும்மதத்தினரும் வந்து செல்லும் ஆன்மிக சுற்றுலாத் தளமாக காரைக்கால் திகழ்கிறது.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளார் வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து காரைக்கால் வர சாலை போக்குவரத்து வழி மட்டுமே உள்ளது. கடந்த 1951ம் ஆண்டு காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இடையே 22 கி.மீ., துாரத்திற்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வந்தது.

இந்த வழித்தடத்தில் அம்பகரத்துார், தேவமாபுரம், சுரக்குடியில் சிறிய ரயில் நிலையங்களும் இயங்கியது. பேரளத்தில் இருந்து சீர்காழி, சிதம்பரம், கடலுார் வழியாக சென்னை செல்ல ஏதுவாக இருந்தது.

காரைக்கால் பேரளம் வழித்தடத்தில் போதிய வருவாய் இல்லை என கூறி, கடந்த 1984ம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ரயில் பாதையில் இருந்து தண்டவாளங்களும் பெயர்த்து எடுக்கப்பட்டது.

காரைக்கால் - நாகூர் இடையே புதிய அகல ரயில்பாதையும், காரைக்காலில் ரயில் நிலையம் அமைத்து கடந்த 17.12.2011ம் தேதி ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து சென்னை, திருச்சி, பெங்களூரு, மும்பை, எர்ணாக்குளம், தஞ்சாவூர், வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழியாக பேரளம் ரயில் நிலையம் அடைய 64 கி.மீ., சுற்றி வர வேண்டி உள்ளது. காரைக்காலைச் சுற்றி ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், டைல்ஸ் தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள் இயங்கி வருகிறது.

தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் சாலை வழியாக கொண்டு வரப்படுவதால், நேர விரயம் மற்றும் செலவும் அதிகரித்து வருகிறது. மேலும், நாட்டின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் திருநள்ளார் வருவதால், காரைக்கால் - பேரளம் ரயில் பாதையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதனால் காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, கடந்த 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 183 கோடி மதிப்பில், அகல ரயில்பாதை அமைக்கும் திட்ட பணிகள் துவங்கியது. இந்த வழித்தடத்தில் கோவில்பத்து, திருநள்ளார், பத்தக்குடி, அம்பகரத்துார் ஆகிய 4 இடங்களில் ரயில் நிலையங்கள், 23 இடங்களில் சிறிய பாலம் மற்றும் சுரங்கப்பாதை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுாலாறு மற்றும் பைபாஸ் சாலையில் மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சமதள பகுதியில் மண் நிரப்பி ரயில் தண்டவாளங்கள் பொருத்த தயார்படுத்தி வருகின்றனர். ரயில் பாதை அமைப்பதிற்கான சிமெண்ட் கட்டைகள் கொண்டுவரப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகள் முழுமை பெற்ற பின்பு, ரயில்பாதை பணி துவங்கும் எனவும், இந்தாண்டு இறுதிக்குள் ரயில்பாதை பணி முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி - கடலுார் பாதை
திட்டம் துவங்குமா?

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை.

விழுப்புரம் சென்று அங்கிருந்து காரைக்கால் செல்லலாம்.

அதன்படி, புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்ல ரயில் மூலம் 239 கி.மீ., கடந்து செல்ல வேண்டும்.

புதுச்சேரி - கடலுார் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்டால், காரைக்காலில் இருந்து பேரளம், சீர்காழி, சிதம்பரம், கடலுார் வழியாக புதுச்சேரிக்கான ரயில் பாதை துாரம் 138 கி.மீ., ஆக குறையும். 2 மணி நேரத்தில் புதுச்சேரியை அடைந்து விடலாம்.

எனவே, புதுச்சேரி - கடலுார் ரயில்பாதை திட்டத்தையும் விரைவில் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments