திருச்சி அருகே அதிகாலையில் லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் பலி கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்
திருச்சி அருகே லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு விரைவு பஸ்

சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள களப்பாலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (வயது 45) ஓட்டிவந்தார்.

பஸ்சில் மணப்பாறையை சேர்ந்த கோபிநாதன் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ் நேற்று அதிகாலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அருகே திருவானைக்காவல் பகுதியில் உள்ள இரணியம்மன் கோவில் அருகே வந்தது. அப்போது, பஸ்சின் முன்னால் செங்கல் ஏற்றிச்சென்ற லாரியின் டயர் திடீரென வெடித்தது.

லாரி மீது மோதி விபத்து

இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. உடனே டிரைவர் சந்தோஷ்குமார் (23) பிரேக் பிடித்து லாரியை நடுரோட்டில் நிறுத்தினார். அதேநேரம் லாரியை பின்தொடர்ந்து வந்த அரசு பஸ் டிரைவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் லாரியின் பின்னால் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் கோபிநாதன், பஸ்சில் பயணம் செய்த அறந்தாங்கியை சேர்ந்த மனோஜ் (19), திருச்சி உறையூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (48), பெரம்பலூரை சேர்ந்த தர்மராஜ் (39), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் (50), ராமேசுவரத்தை சேர்ந்த சகாயகபிலாஸ் (50), காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமார் (42) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ் டிரைவர் சாவு

இந்த விபத்தில் பஸ் டிரைவர் பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments