13 வருடங்களுக்கு பிறகு ரயில் சேவை போடியில் பொதுமக்கள் உற்சாக வெள்ளத்தில் கோலாகல விழா: போடி- சென்னை சென்ட்ரல் & போடி - மதுரை இடையே இரண்டு ரெயில் சேவைகள்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்
போடி-சென்னை சென்டிரல் இடையிலான அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும் போடி-மதுரை பயணிகள் ரெயில் சேவையை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். மக்கள் உற்சாக வெள்ளத்தில் கோலாகலமாக தொடக்க விழா நடந்தது.
மதுரை-போடி ரெயில்

மதுரை-போடி இடையே 90 கிலோமீட்டர் தூரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இதை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தொடங்கிய வேகத்தில் பணிகள் முடங்கின. போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்தும் நாடாளுமன்றத்தில் இந்த ரெயில் பாதை திட்டம் தொடர்பாக தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்தன. மதுரையில் இருந்து தேனி வரை 75 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி இந்த ரெயில் பாதையில் பயணிகள் ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சேவை நீட்டிப்பு

அதன்பிறகு தேனியில் இருந்து போடி வரையிலான பணிகளும் நிறைவு பெற்றன. அந்த பாதையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல முறை ரெயில் மற்றும் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதையடுத்து மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவையை போடி வரை நீட்டிக்க ரெயில்வே துறை அனுமதி அளித்தது.

இதேபோல், தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வரை வாரம் 3 முறை இயக்கப்பட்டு வந்த அதிவேக (சூப்பர் பாஸ்ட்) எக்ஸ்பிரஸ் ரெயிலை போடி வரை நீட்டித்தும் ரெயில்வே துறை அனுமதி அளித்தது.

போடி வரை நீட்டிக்கப்பட்ட ரெயில் சேவைகள் தொடக்க விழா போடி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு போடி-மதுரை பயணிகள் ரெயில், போடி-சென்னை சென்டிரல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 2 ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இரவு 8.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலையும், இதைத்தொடர்ந்து மதுரைக்கு செல்லும் ரெயிலையும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரெயில்களில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத், போடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதர்மன், கட்டிட காண்டிராக்டர் மணிவண்ணன், ராமேசுவரம் உச்சிப்புளி கிரீன் ராயல் ஓட்டல் நிர்வாகி செல்வம், கம்பம் சூர்யா பல்பொருள் அங்காடி நிர்வாகி தனுஷ், தேனி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோபி, போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர், போடி வட்டார விவசாய அணி தலைவர் சிவக்குமார், கலை இலக்கிய அணி தலைவர் அருணா, ஜெ.ஜெ. கன்ஸ்ட்ரக் ஷன் என்ஜினீயர்கள் செல்வின், ரிச்சர்ட், எஸ்.வி.எஸ். கிராண்ட் இன் உரிமையாளர் ஞானவேல், ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் உரிமையாளர்கள் வீராச்சாமி, சந்திரன், நியூ விஜயா ஓட்டல் உரிமையாளர்கள் பெருமாள் முரளி, சுப்புலட்சுமி, தாஸ் பாரடைஸ் உரிமையாளர் தாஸ், ஏலக்காய் வியாபாரி குமார், தேனி எம்.எம். பல் மருத்துவமனை டாக்டர் பாஸ்கரன், பாண்டியன் டெய்லர்ஸ் உரிமையாளர் முத்துப்பாண்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட பொது மேலாளர் அனந்த் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

போடி ரெயில் நிலையத்தில் மக்களின் உற்சாக வெள்ளத்தில் கோலாகலமாக இந்த விழா நடந்தது. ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் வழிகளில் ஏராளமான வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போடி நகரே விழாக்கோலமாக காட்சி அளித்தது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments