அடியக்கமங்கலம் பகுதியில் குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே தள்ளு முள்ளு




திருவாரூரை அடுத்து அடியக்கமங்கலம் பகுதியில் உள்ள குப்பைகிடங்கை இடம் மாற்றக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம் நடந்தது.

குப்பைக் கிடங்கு

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும். புதுக்காலனி வாய்க்காலில் இடிந்த பாலத்தை புதிதாக கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க. மற்றும் ம.ம.க சார்பில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த அவர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்கள் ஊராட்சி அலுவலகத்தின் வாசலில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது குப்பைகள் நிறைந்த மூட்டையை வீசினர். இதனால் போலீசாருக்கும், போராட்டகார்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அடியக்கமங்கலம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மாற்று இடங்கள் தேர்வு

குப்பைகள் தீயிட்டு கொழுத்தப்படுவதால் புகை மூட்டமாக காட்சி அளிப்பதோடு, சுவாச பிரச்சினையும் ஏற்படுகிறது. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தான் குப்பை கொட்டும் போராட்டம் நடத்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அறிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி வரதராஜனிடம் கேட்டபோது, ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறோம். தூய்மை பணியாளர்களை கொண்டு தினமும் பணிகளை மேற்கொண்டு குப்பைகளை குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படுகிறது. மேலும் அந்த இடத்தை அடிக்கடி சீரமைத்து வருகிறோம். மக்கும் குப்பை -மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டப்படுகிறது. அடியக்கமங்கலம் பகுதி மக்கள் குப்பை கிடங்கை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குப்பைகள் கொட்டுவதற்கான மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணிகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது என கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments