புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிதமிழகத்திலேயே 2-வது அரசு பல் மருத்துவமனை புதுக்கோட்டையில் விரைவில் திறக்கப்பட்டு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


பல் மருத்துவக்கல்லூரி

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.63.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்திலேயே 2-வது அரசு பல் மருத்துவமனை புதுக்கோட்டையில் விரைவில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

என்.எம்.சி. நிர்வாகம் ஆய்வு

இதேபோன்று மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 6 பேராசிரியர்கள், 11 இணை பேராசிரியர்கள், 30 உதவி பேராசிரியர்கள், 102 ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். புதுக்கோட்டையில் தற்போது நடைபெற்று வரும் பல் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அனைத்தும் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் நிறைவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

என்.எம்.சி. நிர்வாகம் ஆய்வு செய்த போது 3 மருத்துவக்கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக சிறு குழப்பம் இருந்தது. தற்போது அந்த குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் என்.எம்.சி. நிர்வாகம் ஆய்வு செய்து மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை

ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வாரிய பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றதால் தான் தற்போது சென்னையில் பெய்து வரும் மழையினால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பெய்து வரும் மழையை ஒரு நாள் மழையாக தான் பார்க்க வேண்டும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தேவையில்லை. இருப்பினும் மருத்துவத்துறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.

மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் காலதாமதம் எங்கு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு சொன்னால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று கடந்த 2 ஆண்டுகள் போல் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பை தொடருவார்கள்.

தட்டி எழுப்ப வேண்டிய சூழ்நிலை

கடந்த ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை தூங்கி கொண்டு இருந்த காரணத்தினால் தான் தற்போது சுகாதாரத்துறையை தட்டி எழுப்ப வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 6 லட்சத்து 3 ஆயிரம் சதுரடி பரப்புள்ள கட்டிடங்களை தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக 15 மாத காலத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இது முதல்-அமைச்சரின் சாதனையாகும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1½ கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 1½ லட்சம் பேர் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments