சவூதி அரேபியாவில் ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த நாகூரை சேர்ந்த பக்ருதீனை மீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் IWF மற்றும் ரியாத் KMCC!சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த நாகூரை சேர்ந்த பக்ருதீனை மீட்டு ரியாத் மண்டல இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் ரியாத் KMCC அமைப்பினர் தாயகம் அனுப்பி வைத்தனர்.

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த அப்துல் ஹமீது பக்ருதீன் என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருந்த அறைக்குள் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பக்ருதீன் என்பவருக்கு உரிய உதவி செய்து அவரை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவருடைய உறவினர்கள் மூலம் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். உடனடியாக ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் பக்ருதீன் அவர்களை நேரடியாக மருத்துவமனையில் சந்தித்து அவரை தாயகம் அனுப்புவதற்கான பல்வேறு வழிகள் குறித்து ஆலோசித்தார்.

இதனிடையில் பக்ருதீன் அவர்களின் இகாமா காலாவதி ஆகிவிட்டதாலும், மேலும் அவருடைய பெயரில் ஒரு வாகனம் இருந்த நிலையில் அவரை தாயகம் அனுப்பி வைப்பதில் பல்வேறுபட்ட சட்ட சிக்கல்கள் இருந்த நிலையில் பக்ருதீனை சுமைசி மருத்துவமனையில் இருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு ரியாத்தில் இருந்து  சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்துல் ஹமீது பக்ருதீன் பெயரில் அவர் உபயோகித்துக் கொண்டிருந்த வாகனம் மற்றும் இவருடைய இகாமா காலாவதியான காரணத்தினால் வாகனத்தை பெயர் மாற்றம் செய்ய முடியாமலும், விற்க முடியாமலும் அந்த வாகனத்தின் மீது சாலை பாதுகாப்பு விதிமீறல் காரணமாக அபராத தொகை கட்ட வேண்டி இருந்தது.
இது போன்ற அனைத்து பொருளாதார சிக்கல்களையும் சரி செய்து IWF ரியாத் மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாட்ஷா, ரியாத் KMCC மெஹபூப், KMCC சித்திக் மற்றும் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடனும் கடந்த 9/06/2023 வெள்ளிக்கிழமை அன்று அப்துல் ஹமீத் பக்ருதீன் அவர்களை தாயகம் அனுப்புவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து ரியாத்துக்கு வெளியில் இருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ரியாத்திற்கு கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் பழுதடைந்து பயணம் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

பின்பு மற்றொரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணிய பொழுது நேரம் குறைவாக இருந்த காரணத்தினால் அதுவும் பலனளிக்கவில்லை, பின்பு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அப்துல் ஹமீத் பக்ருதீன் அவர்களை எப்படியேனும் ரியாத் விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அதுவும் பலனளிக்காமல் போனது.

கொடிப்பள்ளம் சாதிக் பாஷா மற்றும் KMCC மஹபூப் அவர்களின் விடா முயற்சியால் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அப்துல் ஹமீத் பக்ருதீன் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து , புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சையது மைதீன் என்ற சகோதரரை அப்துல் ஹமீத் பக்ருதீன் அவர்களுக்கு வழி துணையாக ரியாத்தில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் பக்ருதீன் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பக்ருதீனை தாயகம் அனுப்புவதற்காக மிகப்பெரிய பொருளாதார செலவு ஏற்பட்டது. அந்த செலவுகள் அனைத்தையும் இந்திய தூதரகம் மற்றும் தயாள உள்ளம் கொண்ட சகோதரர்கள் உடைய பங்களிப்பினால் இந்த சகோதரரை தாயகத்திற்கு அனுப்பி வைக்க முடிந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்தப் பணியில் ஆரம்பம் சகோதரர் ஹசன் உடனிருந்து உதவினார்.
கடந்த ஓராண்டு காலமாக தொடர்ச்சியாக முயற்சி செய்து இறைவனின் அருளால் சகோதரர் பக்ருதீன் அவர்களை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் ரியாத் KMCC நிர்வாகிகளுக்கு பக்ருதீன் குடும்பத்தினர் உணர்ச்சிப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF),
சமூக நலத்துறை,
மத்திய மண்டலம்,
ரியாத் - சவூதி அரேபியா.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments