நாகுடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாகுடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் இன்றி தவிப்பு

அறந்தாங்கி அருகே நாகுடி ஊராட்சியில் உள்ள அருணாசலப்புரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த பகுதி பொதுமக்கள் பல வருடங்களாக குடிநீர் பெற்று வந்தனர். இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடங்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

மறியல்

இதுகுறித்து அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் (மார்க்சிஸ்ட்) நாகுடி- அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஓரிரு தினங்களில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகுடி- அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments