புகார் கொடுத்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்! ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் செக் பவர் பறிப்பு!! தென்காசி கலெக்டர் நடவடிக்கை!!!



களப்பாகுளம் ஊராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அதிகாரங்களைப் பறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட களப்பாகுளம் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினராக உள்ள சந்திரன் என்பவரும், அவருடன் சேர்ந்து அதே ஊராட்சியில் உறுப்பினராக உள்ள எட்டு வார்டு உறுப்பினர்களும் கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், “தங்களது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள சிவசங்கரி என்பவர், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்த மக்கள் நலப்பணிகளையும் நிறைவேற்ற முன்வருவதில்லை. அத்துடன் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவது குறித்து புகார் அளித்தால் தங்களை ஆள் வைத்து கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள சிவசங்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், " களப்பாகுளம் ஊராட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவிட்டால் பதவிகளை ராஜினாமா செய்யப் போகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சங்கரன்கோவில் வட்டார மண்டல அலுவலர் ராஜாமணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் புகார் ஒருபக்கம் இருந்தாலும், களப்பாகுளம் பஞ்சாயத்தில் உள்குத்து கலாட்டாக்களால் அடிப்படை வசதிகள் மிகத் தாமதமாக நடந்து வருவதும், ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதை ஆட்சியருக்கு அறிக்கையாக அவர்கள் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து களப்பாகுளம் ஊராட்சிமன்றத் தலைவர் சிவசங்கரி, துணைத் தலைவர் மரகதம் ஆகிய இருவருக்கும் காசோலைகள் மற்றும் பிஎப்எம்எஸ் எனப்படும் பணம் வழங்கும் ரசீதுகளில் கையெழுத்துப் போடும் அதிகாரத்தையும் ரத்து செய்து ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் களப்பாகுளம் ஊராட்சி மன்றத்தில் காசோலைகளில் கையெழுத்துப்போடும் அதிகாரம் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments