இயற்கை அழகோடு வசீகரிக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு




முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

சுற்றுலா வளர்ச்சி பணிகள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அலையாத்திக்காடுகளுள் ஒன்றாகும். முத்துப்பேட்டை பகுதியில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 591 எக்டேர் பரப்பளவு காணப்படுகிறது.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அரசு சார்பில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், செல்வராஜ் எம்.பி., சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயந்தி, மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

படகில் சென்று ஆய்வு

ஜாம்புவானோடை படகு துறைக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அலையாத்திக்காட்டுக்குள் சென்று சுற்றுலா வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர்.


தமிழகத்துக்கு இந்த ஆண்டு 14 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் தங்கும் வசதி, கழிவறை, உணவகங்கள், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக ரூ.4 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மிகவும் அழகான முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கிறது என்றால், அதை பிரபலப்படுத்தவில்லை, போதிய வசதி இல்லை என்பது காரணமாக இருக்கும். எனவே முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், வனச்சரகர் ஜனனி, ஒன்றிய ஆணையர் சிவக்குமார், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், துணைத் தலைவர் ராமஜெயம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

எம்.பி.-கலெக்டர் சென்ற படகில் ஓட்டை

அலையாத்திக்காட்டில் நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தனி படகில் சென்றனர். அதேபோல நாகை செல்வராஜ் எம்.பி., மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாரிமுத்து எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றனர். இந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றிருந்த நேரத்தில் படகிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தண்ணீர் வந்த பகுதியை பார்வையிட்டபோது அதில் ஓட்டை விழுந்து இருப்பது தெரியவந்தது. இதனால் படகில் வந்தவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மீனவர் படகிற்கு எம்.பி., கலெக்டர், எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அந்த படகில் ஆய்வு செய்து விட்டு எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் கரை திரும்பினர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments