எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்கள் 22 பேர் கைது இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

விசைப்படகுகளில்...

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40), முத்துராஜா (25), தனபால் மகன்கள் அமரன் (30), ஜெகநாத் (35), குமார் (43) ஆகிய 6 பேரும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (60) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் இவரும், இவரது மகன்களான ரவீந்திரன் (40), உலகநாதன் (35), வைத்தியநாதன் (27), அருள்நாதன் (23), குமரேசன் (40) ஆகிய ஆறு பேரும் கடலுக்கு சென்றனர்.

17 மீனவர்கள் கைது

இதேேபால் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு விசைப்படகில் காளிமுத்து (45), அர்ஜுனன் (50), குமார் (42), அருண் (22), குருமூர்த்தி (27) ஆகிய 5 போ் என மொத்தம் 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 17 பேரும் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மண்டபம் மீனவர்கள் 5 பேர்

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் 3 ரோந்து கப்பல்களில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். மண்டபத்ைத சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா (வயது 32) ஜிப்ரான் (18), திருப்புல்லாணி வீரபாண்டிவலசையை சேர்ந்த நாகசாமி (50), பெரியப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன் (48), உச்சிப்புளியை சேர்ந்த தேவராஜ் (40) ஆகிய 5 மீனவர்கள் இருந்தனர்.

சிறையில் அடைப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, இலங்கையின் மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைதான ஜெகதாப்பட்டினம், ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 5-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களிடையே அதிருப்தி

சமீபத்தில் படகு பழுதாகி நெடுந்தீவை ஒட்டிய கடல் பகுதியில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நேற்று முன்தினம் இலங்கை கோர்ட்டு விடுத்தது. அவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், தற்போது மேலும் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை

இதற்கிடையே ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களது வீடுகளுக்கு மீனவ சங்க பிரதிநிதிகள் சென்ற ஆறுதல் கூறினர்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

வாழ்வாதாரம் கேள்விக்குறி

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு இருந்துதான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே போகிறது. ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்யும். இதனால் அந்த மீனவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments