டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் நேற்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் கடையும், அறந்தாங்கியில் 4 டாஸ்மாக் கடையும், ஆலங்குடியில் ஒரு கடையும், கறம்பக்குடியில் 2 கடையும், கீரனூரில் 2 கடையும், கீரமங்கலம், திருமயத்தில் தலா ஒரு கடையும் என மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் 12 கடைகள் மூடப்படுவதன் மூலம் மொத்த எண்ணிக்கை 132 ஆக குறைந்துள்ளது. புதுக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிவந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடை இருப்பதாக நினைத்து சிலர் கடைக்கு வந்து பார்த்தபோது அங்கு கடை மூடப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றமடைந்தனர். பின் அருகில் உள்ள கடையை விசாரித்து அங்கு சென்றனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆலங்குடி தாலுகா பழைய நீதிமன்றம் அருகில் டாஸ்மாக் கடை இருந்தது. இந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதன்படி ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இதையடுத்து கடை மூடப்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள், ெபாதுமக்கள் சேர்ந்து மூடு விழா நடத்தினர். தொடர்ந்து மூடிய கடைக்கு மாலை அணிவித்து சூடம் காண்பித்து, தேங்காய் உடைத்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments