கடலுக்கு சென்ற தொண்டி மீனவர்களுக்கு மீன்பாடு கிடைக்காததால் ஏமாற்றம்




ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமானது சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நகர் என்று அழைக்கப்படும் லாஞ்சியடி மற்றும் சோழியக்குடி.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கரை திரும்புவர்.

கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலத்திற்கு பிறகு தற்போது ஆழ்கடல் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆழ்கடலில் கிடைக்கும் இறால், நண்டு, மீன் வரத்து இல்லாமல் சிறிய வகை காரல், நெத்திலி, நண்டு ஆகியவை மட்டுமே வலையில் சிக்குகிறது என மீனவர்கள் வேதனையில் உள்ளனர். மேலும் தற்போது வலையில் சிக்கும் இந்த மீன் வகைகள் கோழி தீவனத்திற்கு மட்டுமே பயன்படும். இவற்றையும் உப்புப் போட்டு வெயிலில் உலர்த்திய பின்னரே விற்பனை செய்ய முடியும். அந்தவகையில் பக்குவப்படுத்தியும் கிலோ ரூ30-க்கு மட்டுமே விலை போகும்.

மீன் பிடி தடைக்காலத்தில் படகுகளை பழுதுபார்த்து செலவு செய்து கையிருப்பு பணம் அனைத்தும் செலவாகி, 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் டீசல், பணியாட்கள் சம்பளம், உணவு உள்ளிட்ட செலவுகள் செய்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றும் கருவாடு காயப்போடும் நிலையே உள்ளது என இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments