குடும்பத்தினரின் வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியவரால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி கிராமங்களை உள்ளடக்கிய பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து சேந்தன்குடி வழியாக தண்ணீர் வரும் அன்னதானக் காவேரி கால்வாய் கடந்த ஆண்டு பொதுமக்களின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டது. இதனால் கால்வாயின் தெற்கு கரையில் உள்ள வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. பலர் சிமெண்டு குழாய்கள் புதைத்து பாலங்கள் அமைத்துள்ளனர். சில இடங்களில் சிமெண்டு குழாய்கள் இல்லாமல் கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த செல்வம்(வயது 40) என்பவர் தனது வீட்டிற்கு செல்ல கால்வாய் கரையோரம் சாலை வசதி வேண்டும் என்று முதல்-அமைச்சர், அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்ததுடன், குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனால் ஒரு வருடமாக நடவடிக்கை இல்லாத நிலையில் கடந்த மார்ச் மாதம் தனது குடும்பத்தில் உள்ள 6 ஆதார் அட்டைகள், 4 வாக்காளர் அடையாள அட்டைகள், 2 குடும்ப அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டத்தை அறிவித்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அங்கு சென்று செல்வம் உள்ளிட்டோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உதவியுடன் புதிய பாதை அமைக்கும் பணியை தொடங்கினார். இதனால் அடையாள அட்டைகள் அனுப்பும் போராட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நிதி பற்றாக்குறையால் சாலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவேற்றப்படாததால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இது தொடர்பாக மீண்டும் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கீரமங்கலம் தபால் நிலையத்தில் இருந்து, தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் வாக்காளர் அடையாள அட்டைகளை தபாலில் மாநில தேர்தல் ஆணையருக்கு செல்வம் அனுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments