கோபாலப்பட்டிணம் VIP நகரில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி! புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க கோரிக்கை!!



மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் VIP நகரில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதாவதால், டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறைந்தழுத்த மின்வினியோகம் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் ஊராட்சி மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் VIP நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பல வருடமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால், இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதிக்கு கொடிக்குளம் துணை மின் பகிர்மான அலுவலகத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பகுதியானது சில வீடுகள் மீமிசல் ஊராட்சிக்கு உட்பட்டும், சில வீடுகள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்டு இருக்கிறது. இந்த பகுதிக்கு பல ஆண்டுகளாக மின் வினியோகம் சரியாக இருப்பதில்லை. பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு அதிக அழுத்த (220 வோல்ட்) மின் வினியோகம் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அதிக நேரங்களில் (140 வோல்ட்) குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

கோடை வெயில் முடிந்தும், புழுக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மின்சாதனங்கள் பழுது
இதனால் மின் மோட்டார்கள் இயங்குவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் வேலை செய்வதில்லை. சில நேரங்களில் பழுதடைந்து விடுகின்றது. மேலும் இந்த பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.மேலும் இதுகுறித்து கொடிக்குளம் மின்பகிர்மான அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மீமிசல் ஊராட்சி நிர்வாகம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் இணைந்தும் மற்றும் கொடிக்குளம் மின்பகிர்மான அலுவலகம் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோபாலப்பட்டிணத்தில் சில மாதங்களுக்கு முன் குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த மின்சாரத்தால் VIP நகர் மக்கள் அவதிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குறைந்தழுத்த மின்னழுத்தத்தை போக்க VIP நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து போதிய மின்சாரம் வழங்க, மின் வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments