பெரியபட்டினத்தில் கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்ட கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்லு பள்ளிவாசல்
இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு என்று பொதுவாக எவ்விதமான விதிகளும் கிடையாது. இஸ்லாம் பரவிய எல்லா நாடுகளிலேயுமே பள்ளிவாசல்களை கட்டும்போது அந்தந்த நாடுகளில் உள்ள கட்டிடக் கலைக்கு ஏற்ப கட்டுமானங்கள் கட்டப்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் கோயில்களைப் போன்றே கற்களால் பள்ளிவாசல்களும் கட்டப்பட்டுள்ளன. முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் கல்லுப்பள்ளி எனப்படுகின்றன. பாண்டியர் முதல் சேதுபதி மன்னர்கள் காலம் வரை கட்டப்பட்ட பழமையான கல்லுப்பள்ளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன.

அவ்வாறான ஒரு கல்லுப்பள்ளி தான் பெரியபட்டினத்தில் உள்ள ஜலால் ஜமால் பள்ளி. இந்த பள்ளிவாசலை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் உள்ள ஜலால் ஜமால் பள்ளி கி.பி.12-13-ம் நூற்றாண்டு கால, தமிழர் கட்டிடக்கலை அமைப்பில், கடற்கரைப் பாறைகளால், கட்டப்பட்டுள்ள ஒரு கல்லுப்பள்ளி ஆகும். இதை கொத்பாபள்ளி எனவும் அழைக்கிறார்கள்.தொழுகை மாடம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. மகாமண்டபத்தைச் சுற்றி சிறிய தாழ்வாரம் அமைந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள தாழ்வாரம் முன்மண்டபமாக உள்ளது. மகாமண்டபத்தின் உள்ளே மேற்குப் பகுதியின் நடுவில் ஒரு குவிந்த அமைப்பில் தொழுகை மாடம் உள்ளது.
மகாமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் தலா ஒரு வாசலும், கிழக்கில் 3 வாசல்களுமாக மொத்தம் 5 வாசல்கள் உள்ளன. இஸ்லாமியரின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தர்மம்), ஹஜ் என்பதன் அடையாளமாக ஐந்து வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.‘லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (ஓர் இறை) என்பதை அரபியில் எழுதும்போது மொத்தம் 24 எழுத்துகளைக் கொண்டுள்ளது.

இதை கலிமா என்பார்கள். கலிமாவின் அடிப்படையில் மகாமண்டபத்தில் தெற்கு வடக்கு வரிசையில் 6 தூண்கள், கிழக்கு மேற்கு வரிசையில் 4 தூண்கள் என மொத்தம் 24 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கிழக்கில் உள்ள மூன்று வாயில்களில் நடுவில் உள்ள வாயிலில் இருந்து தொழுகை மாடம் வரை அதன் இருபுறமும் கூட்டுத் தூண்கள் உள்ளன.

மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பாண்டியர் கால வெட்டுப் போதிகை, நாயக்கர் கால தாமரைப்பூ போதிகை, பூப்போதிகை போன்றவை காணப்படுகின்றன. இதில் உள்ள 24 தூண்களில் ஒரு தூண் மட்டும் முழுவதும் சதுரத் தூணாக வெட்டுப் போதிகையுடன் பிற்காலப் பாண்டியர் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது. மற்ற தூண்கள் பழுது பார்ப்பின்போது போதிகைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தின் தெற்கு, வடக்குப் பகுதி சுவரில் இரு வாசல்கள் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் ஒரு வரிசைக்கு 4 என இரண்டு வரிசைகளில் மொத்தம் 8 பிற்காலப் பாண்டியரின் சதுரத் தூண்கள் வெட்டுப் போதிகைகளுடன் உள்ளன. இங்கு உள்ள தூண்கள் மற்றும் போதிகைகளின் அமைப்பை பார்க்கும்போது இப்பள்ளி பிற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு விஜயநகர, நாயக்கர், சேதுபதி மன்னர்கள் காலத்தில் பழுது பார்க்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது.

இப்பள்ளியின் முன்பகுதியில் அடக்கமாகி உள்ள ஜலால், ஜமால் ஆகியோரின் பெயரால் இப்போது ஜலால் ஜமால் பள்ளி என இது அழைக்கப்படுகிறது. பெரியபட்டினம் ஜலால் ஜமால் பள்ளியில் நகரா என்ற ஒரு பெரிய இசைக்கருவியும் உள்ளது. இது தொழுகைக்கு மக்களை அழைக்க ஒலிபெருக்கிகள் வரும் முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது,

திருப்புல்லாணி கல்வெட்டு: திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டில், கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் என்ற இஸ்லாமியர்களின் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. மேலும் பவித்திரமாணிக்கப்பட்டினம் தற்போதைய பெரியபட்டினம் என அறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments