அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் மருத்துவ துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்




அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ துறையினருக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவத்துறை அலுவலர்கள், தலைமை மருத்துவர்கள் மற்றும் வட்டார மருத்துவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து சுகாதார திட்டங்கள், சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மகப்பேறு, சிசு மரணங்கள், அவற்றை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தட்டம்மை ரூபெல்லா, தேசிய அயோடின் குறைபாடு கட்டுப்பாடு திட்டம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுகின்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனைகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் விரைவாக நல்ல முறையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவ வசதி

கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக சிகிச்சை பெறும் வகையில் அவர்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்க வேண்டும். கிராம செவிலியர்கள் மூலமாக கிராமப்புறங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவசதி தேவைப்படும் நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், இணை இயக்குனர் (ஊரக நலப் பணிகள்) ராமு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ராஜ்மோகன், துணை இயக்குனர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments