பாம்பனில் புதிதாக அமைத்த தண்டவாளத்தில் லாரி மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி




பாம்பன் மண்டபம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே தண்டவாள பாதையில் இயக்கப்படும் லாரியையும், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்படுவதையும் படத்தில் காணலாம்.


பாம்பன் புதிய ரெயில் பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாள பாதையில் லாரி மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது.

ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி

பாம்பன் கடலில் ரூ.450 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே பாம்பன் ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து மண்டபம் ரெயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள 2 கிலோ மீட்டர் தூரத்தில் 105 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ரெயில்வே தண்டவாள பாதையானது அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அந்த தண்டவாள பாதையின் அருகிலேயே புதிய ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியோடு சேரும் வகையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரெயில் தண்டவாள பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் புதிய ரெயில்வே தண்டவாள பணிக்காக கடந்த வாரத்தில் சிலிப்பர் கற்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பாதையில் ரெயில்வே தண்டவாள கம்பிகள் அமைக்கப்பட்டு தற்போது அங்கு லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த மாதத்தில் முடிவடையும்

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது. மண்டபத்திற்கும் பாம்பன் ரெயில்வே பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக ரெயில்வே தண்டவாள பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சிலிப்பர் கற்கள் போடப்பட்ட இடத்தில் தண்டவாளம் அமைக்கப் பட்டு தற்போது அந்த தண்டவாள பாதை வழியாகவே லாரிகள் இயக்கப்பட்டு லாரிகள் மூலம் சிலிப்பர் கற்கள் மற்றும் தண்டவாள கம்பிகளுக்கு இடையே ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி நடந்து வருகிறது.

ஜல்லிக்கற்கள் முழுமையாக கொட்டும் பணிகள் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடும். பின்னர் இந்த 2 கி.மீ. தூர ரெயில் பாதையில் பேக்கிங் என்ஜின் மூலம் முழுமையாக சமதளப்படுத்தப்பட்டு தண்டவாளம் மற்றும் சிலிப்பர் கட்டைகளும் சரி செய்யப்படும். முழுமையாக இந்த பணியானது இந்த மாதத்தில் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments