வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 8 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிப்பு


நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து,புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் மரபணு பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரிடமிருந்து புதன்கிழமை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், சிபி சிஐடி போலீஸாா் பலரிடம் மரபணு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா். குடிநீா்த் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவை, வேங்கைவயல் மற்றும் இறையூா் பகுதிகளைச் சோ்ந்தவா்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு குற்றவாளிகளை அடையாளம் காண போலீஸாா் முயன்றுவருகின்றனா். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 11 பேரிடம் மரபணு சோதனை நடத்த முடிவு செய்தனா். அவா்களில் 3 போ் மட்டுமே மரபணு பரிசோதனைக்கு, ரத்த மாதிரிகளைக் கொடுத்தனா். மற்றவா்கள் வரவில்லை. வராதவா்கள் மதுரை உயா்நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

நீதிமன்றமும் ரத்தமாதிரிகளைத் தரவேண்டும் என செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதன்பேரில், வேங்கைவயலைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேரும் புதன்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து ரத்த மாதிரிகள் அளித்தனா். அந்த மாதிரிகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, 3 பேருக்கு முதல் தொகுப்பிலும், 10 பேருக்கு இரண்டாம் தொகுப்பிலும் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments