திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்




திருத்துறைப்பூண்டி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி உள்ள பகுதியாகும். வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வந்து செல்லும். திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம், கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் விளையக்கூடிய உப்பு, காய்கறி, பூ வகைகள் அனைத்தும் திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் நகரத்தின் வழியாக செல்லும்.

பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, தொண்டி, மீமிசல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா செல்லும் வாகனங்களும் நகரத்திற்கு வரும். இதனால் திருத்துறைப்பூண்டி நகரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்பட்டது.

அடிக்கடி விபத்துகள்

திருவாரூர் பகுதியில் இருந்து புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள், நாகை சாலையிலிருந்து புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள், முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு வரும் வாகனங்கள், வேதாரண்யத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நாகை கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. எனவே திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்தது

ரவுண்டானா அமைக்கும் பணி

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க இடம் தேர்வு செய்தனர். பின்னர் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்

Photos & News Credit : Daily Thanthi 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments