பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாள சான்றுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பகுதியில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 10 குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பொருட்கள் கண்டெடுக்கப்படுகிறது. இதுவரை வட்ட சில்லுக்கல், கெண்டி மூக்குகள், கண்ணாடி வளையல்கள், சுடு மண் விளக்கு, எலும்பு முனை கருவி, தங்க அணிகலன் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 இதில் தங்க அணிகலன் கிடைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூக்குத்தி அல்லது தோடாக கருதப்படுகிறது. இந்த நிலையில் துளையிடப்பட்ட பானை ஓடுகள் 7 எண்ணிக்கையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுரேஷ்குமார், மகாதேவன் நேற்று பார்வையிட்டனர்.

 அப்போது அரிய பொருட்கள் குறித்து அகழாய்வு இயக்குனர் தங்கதுரை விளக்கி கூறினார். தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். முன்னதாக அகழாய்வு பணிக்கு நிலம் வழங்கியவர்களை நீதிபதிகள் பாராட்டி கவுரவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments