கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வாங்க 20-ந்தேதி முதல் வீடு வீடாக விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ரூ.1,000 வாங்குவதற்கு வருகிற 20-ந்தேதி முதல் வீடுகளுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வந்து டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை வினியோகம் செய்வார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசாணை வெளியீடு

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், பொது வினியோக திட்ட இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட்டுறவு துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

மாநில கண்காணிப்பு குழு

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் தலைவராக செயல்படுவார். ஒருங்கிணைப்பு துறையாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படும்.

தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் கண்காணிக்கவும், இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் மாநில கண்காணிப்பு குழு செயல்படும். இந்த குழுவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஒரு உறுப்பினராக இருப்பார். இவர் அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தி, திட்டத்தை செயல்படுத்தும் அரசு துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குவார்.

மாவட்ட ஆட்சி தலைவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட செயல்பாடுகளை திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வார். சென்னையில் மாநகராட்சி கமிஷனர், இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியாக இருப்பார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான குழு வட்ட அளவிலான குழு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அமைக்க வேண்டும். மாவட்ட குழுவிற்கு கலெக்டர் தலைவராக செயல்படுவார். இந்த மாவட்ட அளவிலான குழுவில் கூட்டுறவு துறை இணை பதிவாளரை ஒரு உறுப்பினராக நியமிக்கலாம். ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்குவது இணைப்பதிவாளரின் பொறுப்பு ஆகும்.

விண்ணப்ப பதிவு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, கட்டுகளாக தொகுக்கப்பட்டு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். மண்டல இணை பதிவாளர்கள், கலெக்டருடன் ஒருங்கிணைந்து டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று அவை ரேஷன் கடை பணியாளர்களிடம் உரிய காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த விண்ணப்பங்களில் ரேஷன் அட்டை எண் மற்றும் பயனாளிகள் முகாம்களுக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து வைத்து, இந்த விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் ரேஷன் கடை பணியாளர் வினியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும் ரேஷன் கடை அடிப்படையில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டை இருக்கும் கடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

20-ந்தேதி டோக்கன்

விண்ணப்ப பதிவு முகாம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்படும். ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக் கூடாது. விண்ணப்பத்தை குடும்ப உறுப்பினர் பெற்றதற்கான ஒப்புகையை பெற வேண்டும்.

ஒவ்வொரு ரேஷன் கடையிலும், எந்தெந்த நாட்களில், எந்தெந்த தெருவில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரத்தை தகவல் பலகையில் அனைவரும் பார்க்கும் வகையில் கடையில் வைக்க வேண்டும். முதல் நாளில் காலை 30 விண்ணப்பங்களும், பிற்பகல் 30 விண்ணப்பங்களும் பதிவு செய்ய நேரமிட்டு வழங்க வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் ஒரு நாளைக்கு 80 விண்ணப்பங்கள் வரை பதிவு செய்யலாம்.

பொது வினியோக திட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க தேவையில்லை. அதுபோன்ற குடும்பத்தினர், இந்தத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய விரும்பினால், கடைகளுக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். ரேஷன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை இப்பணியில் ஈடுபடுத்த கூடாது.

17-ந்தேதிவரை சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு திட்டத்தை செயல்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும். 18-ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்களில், ரேஷன் அட்டை எண், முகாம் நடக்கும் இடம் மற்றும் நாள் போன்ற விவரங்களை ரேஷன் கடை பணியாளர்கள் எழுத வேண்டும்.

20-ந்தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments