புதுக்கோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
புதுக்கோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுக்கோட்டை நகரில் டி.வி.எஸ். கார்னர் அருகே நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பெரும்பாலானவை மீன் கடைகளாகும். டி.வி.எஸ். கார்னர் அருகே மீன் கடைகளுக்காக மீன் மார்க்கெட்டும் தனியாக உள்ளது. அங்கு வியாபாரத்திற்காக கடைகள் சில இயங்குகின்றன. இருப்பினும் சாலையோரத்தில் தான் கடைகள் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார்கள் வந்ததால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியை நேற்று அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

டி.வி.எஸ். கார்னர் அருகே சாலையோரம் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது மீன் கடை வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கால அவகாசம் கொடுக்கும் படியும், மாற்று இடம் ஏற்பாடு செய்யவும், மீன் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கி தரவும் கோரினர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து சிலர் தாங்களாக முன் வந்து கடைகளை அகற்றினர். தார்ப்பாய் போட்டு, கம்புகள் ஊன்றி இருந்ததை நகராட்சி ஊழியர்கள் அகற்றி அப்புறப்படுத்தினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆக்கிரமிப்பில் மொத்தம் 11 கடைகள் அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments