புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா




தமிழ்நாட்டில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 147 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருணாநிதி அறிவித்து தொடங்கியதில் இன்று தமிழகத்தில் பல்வேறு மருத்துவக்கல்லூரிகள் வரப்பெற்றிருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் என மொத்தம் 71 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இன்னும் புதிதாக தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
செவிலியர் பயிற்சிகல்லூரிகள்

மத்திய சுகாதார மந்திரியிடம் 14 கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உடனே தொடங்க வேண்டும். கோவையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 30 செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையில் 11 கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் மருத்துவ துறையில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளது.
மனிதநேயமிக்கமருத்துவராக...

மருத்துவ துறையில் கடந்த காலங்களில் அரசு மருத்துவர்களாக வேண்டுமானால் சிபாரிசு அல்லது வேறெதுவும் வேண்டும். ஆனால் இன்று அப்படியில்லை. எம்.ஆர்.பி. மூலம் தகுதியான, திறமையானவர்களை அரசு மருத்துவர்களாக தேர்ந்தெடுக்கின்றனர். மருத்துவ துறையில் பணியிடங்கள், பதவி உயர்வு ஒளிவுமறைவில்லாமல், எந்தவித சிபாரிசும் இல்லாமல் நேரடியாக தகுதியின் அடிப்படையில் வெளிப்படை தன்மையாக நடைபெறுகிறது. இன்று பட்டம் பெறும் மருத்துவ மாணவர்கள் எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேர்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பட்டம் பெறுகிற மாணவர்கள் மனிதநேயமிக்க மருத்துவராக எதிர்காலத்தில் நீங்கள் பிரகாசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், முத்துராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் மெர்சி ரம்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments