இந்தியர்களை வெட்கி தலைகுனிய வைத்த, மணிப்பூர் காட்டு மிராண்டி சம்பவம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
 
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய கலவரங்கள் நடந்து வருகிறது. அதிலே பல உயிர்கள் பறிக்கப்பட்டு, பல்வேறு மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் தான் இந்தியர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம் அங்கு நடைபெற்று சமூக வலைத்தளங்களில் காட்சிகளாகப் பரப்பப்பட்டு வருகிறது.
 
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல், குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.
 
கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கி எடுத்து இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் போது காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று வெட்கப்படக்கூடிய அளவிற்கு அந்தப் பெண்களைச் சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர்.
 
கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறும் பாசிச அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பில்லை.
 
மனிதம் மரித்துப்போகச் செய்த இந்தக் கொடூரச் சம்பவத்தைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இதற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து  வருகின்றனர்.
 
மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.
 
பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி  நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியைப் பகிர வேண்டாமென ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஒன்றிய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால், இதை நாங்கள் கையில் எடுப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
 
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம். இன்னும் அங்கு இணையச் சேவைகள் முடக்க பட்டுத் தான் உள்ளது. இணையச் சேவைகள் முடக்கத்தால், வெளியுலகத்திற்கு வராத சம்பங்கள் நிறைய இருக்கலாம், அவைகளும் வெளிவந்தால் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
 
இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடந்தும் மணிப்பூர் மாநில அரசும், ஒன்றிய அரசும் இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தார்கள். குறிப்பாக மோடி வீடியோ வெளியான இன்று தான் வாய் திறந்து இருக்கிறார்.
 
இந்தக் கலவரம் ஆரம்பித்த உடனேயே தடுத்து இருந்தால், பிரதமர் மோடி வாய் திறந்து இருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது. இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதற்குப் பின்னால்தான் அவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும் கண்டனத்திற்குரியது.
 
காட்டுமிராண்டிகள் வாழும் தேசம் இந்தியா என்று உலக அரங்கில் இந்தியர்களைத் தலை குனியச் செய்த இவர்களைக் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் மணிப்பூர் கலவரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
 
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பல்கீஸ் பானுவிற்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை போன்று இல்லாமல் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
 
இப்படிக்கு, 
முகம்மது மீரான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments