தொண்டி பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வினிேயாகிக்க புதிய குழாய்கள்




சாலை விரிவாக்க பணியால் குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தொண்டி பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்க புதிய குழாய்கள் விரைவில் பொருத்தப்படுகின்றன.

வீணாகும் குடிநீர்

தொண்டி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொண்டி பேரூராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தரைமட்ட தொட்டியில் இருந்து தினமும் நீரேற்றம் நடைபெற்று வினிேயாகிக்கப்படுகிறது.

தற்போது மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருவழி சாலைகள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில் தொண்டி பேரூராட்சிக்கு சென்ற காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சாலையின் நடுவில் சிக்கிக்கொண்டது. கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்லும் போது அதிக பாரம் காரணமாகவும் அதிர்வின் காரணமாகவும் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தொண்டி பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் முழுமையாக கிடைப்பதில்லை.

புதிய குழாய்கள்

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை திருவாடானையில் இருந்து தொண்டி காவிரி கூட்டு குடிநீர் வினியோகத்திற்காக புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தொண்டி முதல் திருவாடானை வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய்கள் சாலையோரத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில தினங்களில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது.


இது குறித்து தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் கூறியதாவது:-

தொண்டி பேரூராட்சியில் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் உருவாகி மக்கள் தொகை எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு காவிரி குடிநீர் தொண்டிக்கு 12 லட்சம் லிட்டர் வழங்க வேண்டும். தற்போது குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தொண்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதின் அடிப்படையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிய குழாய்கள் பதித்து தர முன்வந்துள்ளனர். தொண்டி முதல் திருவாடானை வரை புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டவுடன் 12 லட்சம் லிட்டர் தினமும் காவிரி குடிநீர் கிடைக்கும். இதன் மூலம் தொண்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments