மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகள் வறட்சியால் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.6½ கோடி நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை




மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளில் வறட்சியால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ.6½ கோடி நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. மழையை நம்பி விவசாயத்தில் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த மொத்தம் 6 ஆயிரத்து 746 விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரிந்துரையின் படி நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

நிதி ஒதுக்கீடா?

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை மட்டும் செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு அரசு தான் தெரிவிக்கும். பரிந்துரைத்த தொகை வழங்கப்படுமா? அல்லது குறைவாக வழங்கப்படுமா? என்பது தெரியாது. நிவாரண நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வரவில்லை. பருவம் தவறி பெய்த மழையில் விவசாயிகள் சிலர் பாதிப்படைந்தனர். அவர்களுக்கு நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments