நாகப்பட்டினம்-காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்தால் சோழர் கால ‘நாகை துறைமுகம்’ புத்துயிர் பெறும் புதிய ஒப்பந்தத்துக்கு வர்த்தகர்கள் வரவேற்பு




நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்தால் சோழர் கால ‘நாகை துறைமுகம்’ புத்துயிர் பெறப்போகிறது. இதுதொடர்பான புதிய ஒப்பந்தத்துக்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாகை-காங்கேசன்துறை இடையே படகு ேபாக்குவரத்து

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில் நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து மேற்கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சோழர் கால ‘நாகை துறைமுகம்’ புத்துயிர் பெறும்

சோழர் கால வரலாற்று சிறப்புடைய நாகை துறைமுகத்தை மேம்படுத்தி ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை ஆகும். இந்த நிலையில் நாகை-இலங்கை இடையேயான பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக சோழர் கால நாகை துறைமுகம் மீண்டும் புத்துயிர் பெறும் என நாகை பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்று பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நீண்ட நாள் கனவு

நாகையை சேர்ந்த இந்திய வர்த்தக தொழிற்குழுமத்தின் துறைமுக அபிவிருத்தி குழு தலைவரும், பன்னாட்டு ஏற்றுமதியாளருமான சந்திரசேகரன்:-

நாகை துறைமுகத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.வி. சிதம்பரம் என்ற சரக்கு கப்பல் இயக்கப்பட்டது. அதன் பிறகு ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாகையில் இருந்து பயணிகள் படகு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை கடல் வழியாக பயணிகள் படகு போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கனவு.

இந்த ஒப்பந்தம் ஏற்பட முழு முயற்சி எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகிய இருவருக்கும் நாகை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூர்வாங்க நடவடிக்கைகள்

இதன் தொடர்ச்சியாக நாகை துறைமுகத்தில் கப்பல் அணையும் விதமாக மேம்படுத்த கடல் சார் வாரியம் மூலம் தமிழக அரசு பூர்வாங்க நடவடிக்கைகளை துரிதமாக செய்ய வேண்டும். முதல் கட்டமாக சிறிய அளவிலான பயணிகள் கப்பலே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே கப்பலை சரக்குகளை கையாளும் வகையில் இயக்கினால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பெருகும். இதனால் அன்னிய செலவாணி அதிக அளவில் கிடைக்கும். நாகை துறைமுகத்தில் கடல் வணிகமும், பொருளாதார வளர்ச்சியும் பெருகும். இதனால் நாகை மாவட்டம் வளர்ச்சி அடையும்.

காத்து வாங்கும் நிலைக்கு...

நாகை இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் தலைவர் சலிமுதீன்:-

சோழர்களின் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. இங்கு பன்னாட்டு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. இந்த துறைமுகம் காலப்போக்கில் தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து தற்போது கடற்கரையில் காத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொன்மை வாய்ந்த நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என முடிவு செய்திருப்பது வளர்ச்சியின் முதல் படியாக அமையும்.

இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, நாகை தொழிற்குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்க முயற்சி எடுத்து உள்ளோம். அப்போது நாகை துறைமுகத்தை மேம்படுத்தவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

புதுமலர்ச்சி பெறும்

நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்த்குமார்:-

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க இருநாட்டு தலைவர்கள் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தொன்மை வாய்ந்த நாகை துறைமுகம் மீண்டும் புதுமலர்ச்சி பெறும்.

நாகை துறைமுகத்தில் இருந்து ஏற்கனவே எஸ்.எஸ்.ரஞ்சிலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ், எம்.வி. சிதம்பரம் ஆகிய பயணிகள் கப்பல்கள் பினாங்,, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டன. அதேபோல தற்போதும் நாகையில் இருந்து சிங்கப்பூர்-மலேசியா-பினாங் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

படகுகளை விடுவிக்க நடவடிக்கை

இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார்:-

நாகை துறைமுகம் இயற்கையாகவே அமைந்தது. 1981-க்கு பிறகு நாகை துறைமுகம் தனது கட்டமைப்பை படிப்படியாக இழந்து விட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகத்தை கையாண்டு வந்த நாகை மாவட்டம் தற்போது பின்தங்கிய மாவட்டமாக மாறிவிட்டது. நாகை-இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகமும் மேம்படும். மீன்பிடி தொழிலுக்கு இடையூறு ஏற்படாதபடி துறைமுகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தி விட்டு, படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும்.

அதேபோல இந்தியா-இலங்கை மீனவர் விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். மேலும் நின்று போன இந்தியா-இலங்கை தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இலங்கையில் பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments