சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் கோரி 1 கோடி கையொப்பங்களைப் பெறும் இயக்கம் தொடக்கம்!




தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி ஒரு கோடி கையொப்பங்களைப் பெறும் இயக்கம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

'சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு' அண்மையில் சென்னையில் தொடங்கப்பட்டது. மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, மூத்த எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் சீ.அ. மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் மண்ணின் மூத்த மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு மேலும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அவற்றை ஆவணப்படுத்தவும், சித்த மருத்துவக் கல்வியைத் தரப்படுத்தி வழங்கவும், அரசு சார்பில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அண்மையில் இதற்கான சட்டமுன்வடிவை பேரவையில் இயற்றி, சென்னையில் இடம் பார்த்து, நிதியும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால், கையெழுத்திட அவரை வலியுறுத்தும் வகையில் ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று ஆளுநரை நேரில் சந்தித்து அளிக்க இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி கையொப்பமிடும் பொது மக்கள்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கையொப்ப இயக்கத் தொடக்க நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சீ. அ. மணிகண்டன் தலைமை வகித்தார். 

திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தார். கம்யூனிஸ்ட் (மா-லெ) கட்சியின் பொதுச் செயலர் க.சி. விடுதலைக்குமரன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி, காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கையொப்பமிட்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளிடம், கல்லூரி மாணவர்களிடமும் கையொப்பங்கள் பெறப்பட்டன. இதேபோன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு, ஒரு கோடி கையொப்பங்கள் பெறப்பட்டு ஆளுநரை சந்தித்து வழங்கவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments