திருமயம் கோட்டையில் கண்டறியப்பட்ட பழங்கால மனிதா்களின் வாழ்விடங்கள்






புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டைக் குன்றின் தெற்குச் சரிவில் பழங்கால மனிதா்களின் வாழ்விடங்கள் - குகைக் குன்றுகள் நான்கு கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாட்சியரும், புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவருமான ஜெ . ராஜா முகமது கூறியது:

மலைகளிலும், குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த குகைகள், கற்கால மனிதனின் வாழ்விடங்களாக இருந்திருக்கின்றன. இவற்றின் காலம் சுமாா் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். இத்தகைய குகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாா்த்தாமலை, அம்மா சத்திரம், குடுமியான்மலை, தேனிமலை, சித்தன்னவாசல் ஆகியவற்றிலும் இந்தக் குகைகள் உள்ளன.

திருமயம் குன்றின் மேற்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கோட்டையும், கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சிவன் மற்றும் விஷ்ணு குடைவரைக் கோயில்களும் உள்ளன.

குன்றின் தெற்குச் சரிவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள பெரியதும், சிறியதுமான இந்த 4 குகைகளும் குன்றின் தரைமட்டத்திலிருந்து வெவ்வேறு உயரத்தில் அமைந்துள்ளன. மேற்குத் திசையிலிருந்து முதலில் காணப்படும் குகையின் முகப்பிலிருந்து உள்பகுதி வரை சுமாா் 10 அடி உயரத்துக்கு மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. வாயில் மட்டும் சிறிய திறப்பாகக் காணப்படுகிறது.

ஆகவே குகையின் உட்பகுதி குறித்து அறிய முடியவில்லை. ஆனால் இதுபோன்ற குகைகளில் மழை நீா் உள்ளே வராமல் இருக்க மேல் முகட்டில் பள்ளமாக வெட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற அமைப்பு இங்கும் காணப்படுகிறது. இதே அமைப்பு கொண்ட குகை, மலையடிப்பட்டியிலும் உள்ளது.

இண்டாவது சிறிய குகை தரைமட்டத்திலிருந்து சுமாா் 5 அடி உயரத்தில் உள்ளது. இச்சிறிய குகையில் சிலா் அமரலாம். மூன்றாவதாக உள்ள குகை சற்று உயரத்தில் உள்ளது. அளவில் சற்று பெரியதாக உள்ள இதன் வாயிலின் முன்பக்கம் முழுவதும் சுவா் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி பரப்பும் அகலமாக உள்ளது.

நான்காவதாக உள்ள சிறிய குகையும் உயரத்தில் உள்ளது. இதன் வாயிலும் சுவரால் மறைக்கப்பட்டுள்ளது. பிற்காலக் கட்டங்களில் இவ்வாறு மூடி மறைக்கப்பட்டுவிட்ட காரணத்தால் இவை இன்னதென்று புரியாமல் மக்களின் பாா்வையில் படாமலேயே இருந்துள்ளது. இந்தக் குகைகள் குறித்து இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

2ஆவதாக உள்ள சிறிய குகையின் கூரைப் பகுதியில் பண்டைய பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவப்பு வண்ணத்தில் உள்ள இந்த ஓவியங்கள் சிவப்புக் காவிக் கல் கரைசல் கொண்டு வரையப்பட்டவை. காலக்கிரமத்தில் பெரும்பாலான ஓவியங்கள் அழிந்தும் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன.

ஆனால் மனித உருவங்கள் சிலவும், மனிதக் கை அச்சு (பிரதி) ஓவியங்கள் சிலவும் நல்ல நிலையில் உள்ளன. இதுபோன்ற கை அச்சுப் பிரதியானது, ஓவியத் தொகுதியை எழுதியவரின் கையாக இருக்கலாம். இதுபோன்ற கை அச்சு ஓவியங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் காணப்படும் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் பண்டைய குகைகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செத்தவரை பாறை ஓவியத் தொகுதியிலும், திருமயத்திலேயே வேறொரு இடத்திலும் காணப்படும் பாறை ஓவியத் தொகுதியிலும் இதுபோன்ற கை அச்சு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் திருமயம் பகுதியின் தொன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என உறுதியாகிறது.

திருமயம் குன்றினைச் சுற்றி மேலும் ஊன்றி ஆய்வு செய்யும்போது இதுபோன்ற சிறிய குகைகள் பல இடங்களில் இருந்து அழிந்துபோனதற்கான எச்சங்கள் தென்படுகின்றன. பிற்காலத்தில் குன்றினை ஒட்டி இணைத்து கோயில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட போது இவை சேதமடைந்திருக்கலாம். தொடா்ந்து ஆய்வுகள் நடக்கின்றன என்றாா் ராஜா முகமது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments