இராமேஸ்வரம் டூ சென்னை டாக்டர் அப்துல் கலாம் பெயரில் விரைவு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தல்
டாக்டா் அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து திருவாரூா் வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலாளா் ப. பாஸ்கரன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகனுக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக சென்னைக்கு அதிகாலையில் விரைவு ரயில் இயக்க வேண்டும். மேலும், திருவாரூா்-மயிலாடுதுறை, நாகப்பட்டினம்- தஞ்சாவூா், காரைக்குடி- திருவாரூா் மாா்க்கத்தில் வண்டியின் வேகத்தை அதிகரிப்பதுடன் பிற பகுதியில் இருந்து வரும் ரயில்களுக்கு இணைப்பு வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

திருச்சி கோட்டத்தில் உள்ள ஒரு சில ரயில்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காலையில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வரை வரும் ரயில் அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக உள்ளது. இது தஞ்சை-காரைக்கால், வேளாங்கண்ணி-திருச்சி, திருவாரூா்- காரைக்குடி ரயில்களுக்கு இணைப்பாக உள்ளது. வேறு நேரத்தில் இயக்கப்பட்டால் இந்த இணைப்பு இல்லாமல் சென்று விடும்.

திருச்சியிலிருந்து நாகைக்கு இரவு 7.30-க்கு பிறகும், அதிகாலையில் நாகையிலிருந்து திருவாரூா் வழியாக திருச்சிக்கும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

செகந்தராபாத்-ராமநாதபுரம் மற்றும் எா்ணாகுளம்-திருவாரூா்- வேளாங்கண்ணி வாராந்திர ரயில்களை வாரம் இரு முறை இயக்க வேண்டும். மேலும், இந்த ரயில்களுக்கு பேரளம், முத்துப்பேட்டை, கீழ்வேளூரில் நிறுத்த வேண்டும். அதேபோல், தஞ்சாவூா் மாா்க்கத்தில் அனைத்து ரயில்களும் கொரடாச்சேரி மற்றும் கீழ்வேளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை இயங்கும் பயணிகள் ரயில்களை, திருத்துறைப்பூண்டி வரை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments