புதுக்கோட்டை அருகே கணித ஆசிரியர் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு: அரசு பள்ளியை பூட்டி பெற்றோர் போராட்டம்




புதுக்கோட்டை அருகே கணித ஆசிரியர் பணிக்கு வராததால் அரசு பள்ளியை பூட்டி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளியை பூட்டி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் பள்ளிக்கு சரிவர வராமல் விடுப்பில் இருந்து வருவதாகவும், பள்ளிக்கு வந்தாலும் வகுப்பில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதில்லை எனவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் அந்த பள்ளியை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளியின் வெளியே தரையில் அமர்ந்திருந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கணித ஆசிரியருக்கு பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, “கணித ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, தொடக்க கல்வி மாவட்ட அதிகாரி அறிக்கை அளித்த பின் அடுத்தக்கட்டமாக அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments