விராலிமலை அருகே மக்கள் தொடர்பு முகாம்: 655 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
விராலிமலை அருகே அகரப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் அரசு துறை அதிகாரிகள் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி கூறினர். பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

 இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று கூறினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments