தென்மேற்கு பருவமழை காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? அதிகாரி விளக்கம்




வருகிற தென்மேற்கு பருவ மழையில் புயல் மற்றும் வெள்ள காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மின்சார வாரிய அதிகாரி விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வையாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

மின்சாதனங்கள்

மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான ஒயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை ஆப் செய்யுங்கள். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்கவும்.

மின்கம்பங்கள்

சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகள் எட்டாத உயரத்தில் அமையுங்கள். குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள். சுவற்றின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும். மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள்.

மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மழையாலும் பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள்.

தீயணைப்பான்கள்

தமிழ்நாடு மின்வாரிய மின்மாற்றிகள் மற்றும் துணைமின்நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர். மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். அவசர நேரங்களில் மின்இணைப்பினை துண்டிக்கும் வகையில் மின்கருவிகளில் சுவிட்சுகளின் இருப்பிடம் அமைய வேண்டும்.

மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாதபட்சத்தில் சுவிட்சுகளை ஆப் செய்து வைக்கவும். மின்சார தீ விபத்துகளுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப்பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்தவும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

தண்ணீர் தேங்குதல்

தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டது எனில், உடனே மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட வேண்டும். மின்சார பெட்டி அருகில், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதன் அருகில் செல்ல வேண்டாம். இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள்.

இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே தஞ்சம் புகாதீர்கள்.

பிளக் பாயிண்டுகள்

இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். தண்ணீர் அல்லது நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து விலகி இருங்கள். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், பலகைகளை ஒரு போதும் இயக்கவோ அணைக்கவோ, நிற்கவோ அல்லது தண்ணீரில் உட்கார்ந்திருக்கவோ கூடாது.

அதிக மின்பளு கொண்ட கருவிகளை இயக்கும் போது ரப்பர் பூட்ஸ் காலணிகளை அணியுங்கள். பால்கனி பகுதி, மொட்டைமாடியில் திறந்த வெளியில் உள்ள மின்சாதனங்கள், பிளக் பாயிண்டுகள் மழை நீர் புகா வண்ணம் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் செல்போன் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இடி அல்லது மின்னலின்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments