திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு! ரயில்வே வாரியம் ஒப்புதல்



 

4 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு திருவனந்தபுரம்-மதுரை இடையே இயங்கும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


இருமார்க்கமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டிஎண் 16343/16343)இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் கேரளா, தமிழ்நாடு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
 
இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.50 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் கொல்லம், சங்கனாச்சாரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவாக, திரிச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் வழியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதுதொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால் ஒப்புதல் என்பது கிடைக்கவில்லை. ரயில்வே பெட்டிகளை சுத்தம் செய்வது, பாம்பன் பாலத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் இருக்கும் சிக்கல் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் தான் திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வேலை நடக்கிறது. இந்த பணிகள் டிசம்பர் மாதம் வரை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இதனால் முதற்கட்டமாக இந்த அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட வாய்ப்புள்ளது. பாலப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு முழுவதுமாக இயக்கப்பட உள்ளது.


மேலும் இந்த ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே வாரியம் இப்போது தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இந்த ரயில் சேவை நீட்டிப்பை வரும் நாட்களில் அமலுக்கு கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments