திருச்சி கோட்டத்தில் ரயில் போக்குவரத்து மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ. 428 கோடி வருவாய் திருச்சி கோட்ட மேலாளா் தகவல்
திருச்சி கோட்டத்தில் ரயில் போக்குவரத்து மூலம் ரூ. 428.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன்.
திருச்சி கோட்ட ரயில்வே சாா்பில் கல்லுக்குழி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ரயில்வே பாதுகாப்பு (ஆா்பிஎப்) படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அவா் மேலும் பேசியது:

திருச்சி ரயில்வே கோட்டம், நிகழ் நிதியாண்டில் 12.287 மில்லியன் பயணிகளை கையாண்டு ரூ. 167.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகம். சரக்குப் போக்குவரத்தில் 4.492 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு ரூ. 258.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டைவிட 19.4 சதவிகிதம் அதிகம். இதுதவிர, பயணச்சீட்டில்லாத பயணிகளிடம் அபராதம் விதித்த வகையில் ரூ.2.87 கோடியும் என மொத்தம் ரூ. 428.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக 6 நடைமேடைகளை இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்கள்), 6 மின் தூக்கிகள் (லிஃப்ட்டுகள்) பயன்பாட்டுக்கு தயாராகவுள்ளன. கோட்டத்தில் உள்ள முக்கிய 23 ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி ரயில்வே கோட்டம், பொறியியல், டீசல், பாதுகாப்பு, வணிகம், சிக்னல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் சிறு விபத்துகள்கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம், முதுநிலை கோட்ட வணிகப்பிரிவு மேலாளா் செந்தில்குமாா், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள், பெண் கமாண்டோ படையினரின் சாகசங்களும், மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பொன்மலை பணிமனையில்: இதேபோல், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதன்மைப் பணிமனை மேலாளா் ஷ்யாமாதாா் ராம் தேசியக் கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற 282 பேருக்கு தனி நபா் மற்றும் குழு விருதுகளை அவா் வழங்கினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments