கோட்டைப்பட்டினத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை






கோட்டைப்பட்டினத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்நிலைப்பள்ளி

கோட்டைப்பட்டினம் ஊராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு அரசு ஆண்–கள் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. 

இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

இதையடுத்து, 11-ம் வகுப்பு படிக்க மாணவிகள் மணமேல்குடி அல்லது அம்மாபட்டினம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவிகள் சிலர் மேல்படிப்பு படிக்காமல் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். 

இதனால் இப்பகுதியில் உள்ள மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

தரம் உயர்த்த கோரிக்கை

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோட்டைப்பட்டினத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பள்ளி செயல்படும் கட்டிடம் ஜமாத் மூலமாக கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தில் தான் பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டி சுமார் 80 ஆண்டுகள் ஆயிற்று. இதனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

போதுமான கட்டிட வசதி இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக தற்காலிகமாக ஒரு தகரக்கூடத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதில் தான் தற்போது மாணவிகள் அமர்ந்து படித்து வருகின்றனர்.

வெயில் காலங்களில் இந்த தகர கொட்டகையில் அமர முடியாமல் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பள்ளிக்கு போதுமான கட்டிட வசதியும் மற்றும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

News Credit : Daily Thanthi 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments